Janardhan koushik
அவர் அரசியலில் நுழைவது குறித்து பல மாதங்களாக வலம் வந்த ஊகங்களுக்குப் பிறகு, 'சிங்கம் அண்ணாமலை' என்று அழைக்கப்படும், முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் மற்றும் தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
தமிழ்நாட்டின் கரூரில் இருந்து வந்த முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி, பெங்களூரு தெற்கில் துணை போலீஸ் கமிஷனராகவும், உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். பல ஆண்டுகளாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பின்னர், 2019 ல் நெருங்கிய நண்பர் இறந்ததைத் தொடர்ந்து குப்புசாமி தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் அவர் தனது சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி, இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் 'We the Leaders அறக்கட்டளையை' தொடங்கினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய குப்புசாமி, பாஜகவில் சேரும் தனது முடிவு ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றார். நாட்டுக்கு சிறந்த ஆளுகை தேவைப்படுவதால் தான் அரசியலில் நுழைவதாகவும், சாமானியர்களை மையத்தில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“கடந்த காலத்தில், நான் எந்தக் கட்சியிலும் இணைந்து அதன் முத்திரையை குத்திக் கொள்ள விரும்பவில்லை என்று சொன்னேன். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், ஒரு சமூக மாற்றத்தைப் போலவே நாட்டிற்கும் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்று நான் உணர ஆரம்பித்தேன். என் கொள்கைகள் அவற்றுடன் இணைந்திருப்பதால் பாஜக எனக்கு இயல்பான பொருத்தமான கட்சி என்று உணர்ந்தேன். அவை தகுதி அடிப்படையில் தலைவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகின்றன. இது நாட்டிற்கான ஒரு பெரிய தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தேசியவாத கட்சி, அதனால்தான் அவர்களுடன் சேர முடிவு செய்தேன்" என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காமிடம் கூறினார்.
திராவிடக் கட்சிகள் தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டன, குடும்ப அரசியல் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றார். “(திராவிடக் கட்சிகள்) அவை ஏன் தோன்றின என்பதை மறந்துவிட்டன. பலர் குடும்ப கட்சியாக இயக்கத்தை நடத்திக் கொண்டுள்ளனர். அதுபோன்ற ஒரு கட்சியில் என்னை நினைத்துப் பார்க்க முடியாது, வரிசையில் நின்று, அந்த கட்சியின் தலைவர் என்னை ஆசீர்வதிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு கட்சி ஒவ்வொரு தலைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தர வேண்டும். அந்த கட்சி தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். மேலும் சாமானியர்களை அதன் கதைகளின் மையத்தில் வைக்க வேண்டும்.
“நான் ஒரு சாதாரண மனிதன், நான் ஒரு விவசாயியின் மகன், எனக்கு எந்த ஆதரவும் இல்லை, என்னிடம் நிறைய பணம் இல்லை. நான் சேமித்தவை அனைத்தும் அரசாங்க சேவையின் மூலம் நான் சம்பாதித்த பணம். என் ரெக்கார்டுகள் எனது நேர்மையைப் பற்றி பேசுகின்றன. எனவே, ஊழல் ஆழமாக வேரூன்றிய ஒரு திராவிடக் கட்சியில் என்னால் சேர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல், பாஜக போன்ற ஒரு தேசியக் கட்சி என்னை வரவேற்கிறது, இது மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அவர்களின் நோக்கத்தைக் காட்டுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, ரஜினிகாந்த் அவரது திட்டங்களை குறித்து அறிவிக்கும் நாளுக்காக தான் காத்திருப்பதாகவும்,அவருடைய கட்சியில் சேர உள்ளதாகவும் கூறியிருந்தார். அவரது திடீர் திட்ட மாற்றம் குறித்து கேட்டபோது, குப்புசாமி, “எனக்கு ரஜினிகாந்திற்கு எதிராக எதுவும் இல்லை… அவர் ஒரு திட்டத்தை கொண்டு வரட்டும்" என்றார்.
2021 தமிழகத் தேர்தல் குறித்து கேட்டதற்கு, “பாஜக என்னிடம் என்ன கேட்டாலும் நான் செய்வேன். நான் 2021 தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன், நான் தமிழக மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன், ஆனால் கட்சி இறுதி முடிவை எடுக்கும். அவர்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும்… ” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.