ஐபிஎல் பெட்டிங் வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமன்ஷு ராய் தற்கொலை!

துப்பாக்கியால் சுட்டு ஹிமன்ஷு ராய் தற்கொலை

மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த ஹிமன்ஷு ராய்,  இன்று  தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த ஹிமன்ஷு ராய், பயங்கரவாத தடுப்புப்படையின் முன்னாள் தலைவராகவும் பதவியில் இருந்தவர். இவர் 2013 ஐபிஎல் சூதாட்ட பெட்டிங் வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு, வக்கீல் பல்லவி கொலை வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தவர். ஐபிஎல் வழக்கை விசாரித்த போது, முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனை கைது செய்தார். அதுமட்டுமின்றி, பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கில், மூத்த பத்திரிக்கையாளர் ஜிக்னாவ் வோரா என்பவரை ஹிமன்ஷு கைது செய்தார். இவ்வாறு, பல வழக்குகளில் திறம்பட விசாரித்து, பல அதிரடியான கைதுகளை மேற்கொண்டவர் ஹிமன்ஷு.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹிமன்ஷு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விடுப்பில் இருந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்று கூட சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். ஆனால், புற்றுநோயின் வீரியம் குறையவில்லை என கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இன்று மதியம் 1.40 மணியளவில், தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு ஹிமன்ஷு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த வேலையாட்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஹிமன்ஷு ராய் 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close