மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான், மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநில கட்சித் தலைவர் சந்திரசேகர் பவான்குலே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அப்போது பேட்டியளித்த அவர், “38 ஆண்டுகால தொடர்பில் இருந்து விலகி இன்னொரு பக்கம் இணைவது அவ்வளவு எளிதல்ல” என்பதை ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், மராட்டிய மாநிலத்திலிருந்து பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளராக அசோக் சவான் இருப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பாஜகவும் அவருக்கு நாந்தேட் சட்டமன்றத் தொகுதியை விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் சவான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “இது எனக்கு கடினமான முடிவு. காங்கிரஸுடனான எனது தொடர்பு நீண்டது. எனது 38 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறுவது எளிதல்ல.
பல ஆலோசனைகளுக்குப் பிறகு பாஜகவில் இணைந்துள்ளேன். எனது மாவட்டம் நாந்தேட், மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தேன்” என்றார்.
மேலும், “பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரின் தலைமையில் நேர்மறையான கண்ணோட்டத்துடன் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, “காங்கிரஸுக்கு அவர்கள் வழங்கிய அனைத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றாலும், அந்த அமைப்பிற்கு நானும் பங்களித்துள்ளேன் என்று கூற விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறுவது எனது தனிப்பட்ட முடிவு, இது மாநில மற்றும் நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனை மனதில் கொண்டு நான் எடுத்தேன்” என்றார்.
2011 ஆம் ஆண்டு முதல் ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழலுடன் தொடர்புடைய வழக்குகளை எதிர்கொண்டுள்ள சவான், இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி இழந்தார்.
இது குறித்து பேசிய சவான், “இந்தப் பிரச்னையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்திருக்கிறது. சில ஏஜென்சிகள் மேல்முறையீடு செய்தன. எந்த சட்ட நடைமுறையாக இருந்தாலும் அது பின்பற்றப்படும். இது ஒரு அரசியல் விபத்து. இந்த சிக்கலை நான் போதுமான அளவு எதிர்கொண்டுள்ளேன். இது இப்போது கவலைக்குரிய விஷயம் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
மேலும் இந்த வழக்கை அரசியல் விபத்து என வர்ணித்தார். தொடர்ந்து, “எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் இணைந்துள்ளேன். மத்திய, மாநில பாஜக தலைவர்கள் என்ன கேட்டாலும் நான் செய்வேன்” என்றார்.
சவானின் வருகை குறித்து பேசிய ஃபட்னாவிஸ், “அசோக் சவானின் பரந்த அனுபவம் மகாராஷ்டிராவில் அரசியல் மற்றும் நிர்வாகத்திற்கு உதவும்” என்றார்.
மேலும், “பாஜக உடன் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் உள்ளனர்; அடிமட்ட தொண்டர்கள் முதல், அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“