சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசம் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, ஆர்எஸ்எஸ் கூடுதல் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் மற்றும் முன்னாள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர் சிங் ஆகியோர் இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
அதுபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில், “அருண் ஜெட்லி அவர்களை சந்தித்துவிட்டு வந்தேன். அவரது உடல்நிலை விரைவில் முன்னேற்றம் காண வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
Visited Sh Arun Jaitley ji. I pray to God for his good health and fast recovery.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 18, 2019
முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஹர்சவர்தன், விமானப்படை தளபதி தனோவா, காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.