கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி சட்டசபை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தனியார் கெமிக்கல் கம்பெனிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். வரும் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. முடிந்த கதை தொடர்வதில்லை. சசிகலாவும் எங்கள் கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“