/indian-express-tamil/media/media_files/2025/08/01/prajwal-revanna-2025-08-01-19-31-00.jpg)
இந்த வழக்கில் ரேவன்னாவுக்கான தண்டனை சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. Photograph: (File Photo)
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவன்னா, அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 4 பாலியல் வழக்குகளில் ஒன்றில் குற்றவாளி என பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கான தண்டனை சனிக்கிழமை (02.08.2025) அறிவிக்கப்பட உள்ளது.
பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் வேலைக்காரியாக இருந்த ஒரு பெண்ணை, அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரஜ்வால் ரேவன்னாவை குற்றவாளியாக அறிவித்தது. நீதிமன்றத்தில் இருந்து ரேவன்னா கண்ணீருடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் .
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பிரஜ்வால் ரேவன்னாவின் பாலியல் அத்துமீறல்கள் குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் அவருக்கு எதிராக 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட ரேவன்னா தோல்வியடைந்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மே 2-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை முடிந்து இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) இந்த வழக்கில் 2024 டிசம்பரில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2025 ஏப்ரல் 3-ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ரேவன்னா, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், "தனது கட்டுப்பாட்டில் அல்லது ஆதிக்கத்தில் இருந்த" ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, கடந்த ஆண்டு மே 8-ம் தேதி ஒரு நடுத்தர வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. ரேவன்னா தனது மொபைல் ஃபோனில் பதிவு செய்த பாலியல் வன்கொடுமை வீடியோக்களில் அந்தப் பெண் அடையாளம் காணப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு மே 5-ம் தேதி மைசூருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து அவர் மீட்கப்பட்டார்.
கடந்த 2024 ஏப்ரல் 26-ம் தேதி பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற பிரஜ்வால் ரேவன்னா, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.
சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) 1,632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில் 113 சாட்சிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களாக வீடியோக்களும், தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.