விதிகளை மீறி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது நல்லதல்ல என்று முன்னாள் எம்.பி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வி ஆண்டில் இருந்து 116 அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை செயல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் தயாரிப்புகளையும் அரசு இன்னும் உருவாக்கவில்லை.
இதனால், தற்போதுள்ள பள்ளிக்கல்வி சூழல் மேலும் மோசமடையும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கக்கூடும். கடந்த காலத்திலும் இதுபோல் பாதிப்பு ஏற்பட்டது. ஒரே ஆண்டில் 5 வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ முறையை செயல்படுத்துவது கடினமான காரியம். சி.பி.எஸ்.இ முறையை செயல்படுத்த இருக்கும் பள்ளி முதல்வர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு அரசு இந்த முடிவு எடுத்திருக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்து விட்டு இப்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. புதுவையில் நிறைய பள்ளிகளில் சி.பி.எஸ்.இ விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாத சூழல் உள்ளது என்று அமைச்சரே ஒத்துக் கொள்கிறார்.
அப்படி என்றால், விதியை மீறி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது நல்லதல்ல. நியாயமும் இல்லை. இது கல்வியின் தரத்தை குறைக்கும். நிதானத்தோடு நன்கு ஆலோசனை செய்து அரசு செயல்பட வேண்டும். இந்த ஆண்டு 5 வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் சி.பி.எஸ்.இ
முறையை செயல்படுத்துவதற்கு பதிலாக 6-ம் வகுப்புக்கு மட்டும் அரசின் எல்லா பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படலாம்.
ஒவ்வொரு ஆண்டாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செயல்படுத்தலாம். அப்போதுதான் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறை, அறிவாற்றல், மொழித்திறன் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக பிணைந்து இருக்கும். அப்படி படிக்கும் மாணவர்களால் தான் எதிர்காலத்தில் நீட், ஜெ.இ.இ, ஐ.ஐ.எம் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”