முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, லண்டனில் அறிவிக்கப்ட்டது.
கடந்த வாரம் ஒரு விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த கௌரவமானது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் (NISAU) மூலம் புதுடெல்லியில் உள்ள டாக்டர் சிங்கிடம் பின்னர் வழங்கப்படும்.
NISAU UK வழங்கும் இந்தியா-யுகே சாதனையாளர் விருதுகள், இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் UK இன் சர்வதேச வர்த்தகத் துறை (DIT) ஆகியவற்றுடன் இணைந்து, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக மன்மோகன் சிங் செய்தி ஒன்றில், “இளைஞர்களிடம் இருந்து வரும் இந்த விருது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மேலும் அதில், “இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் எங்கள் கல்வி கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தின் ஸ்தாபக பிதாக்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து சிறந்த தலைவர்களாக மாறி, இந்தியாவையும் உலகையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றனர்.
பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் 2004-2014 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தார். தற்போது 90 வயதை எட்டிய நிலையில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சாதா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சிஇஓ ஆதார் பூனவல்லா மற்றும் இந்திய மகளிர் கால்பந்து அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் ஆகியோர் சிறந்த சாதனையாளர்களாக கவுரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/