புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93. எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் முதன்முதலில் 1969-ல் தி.மு.க சார்பில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வென்று சட்டப்பேரவைக்கு நுழைந்தார். அவர் 1969 முதல் 1974 வரை தி.மு.க - இடதுசாரி ஆட்சியில் புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அடுத்து, 1974 முதல் 1977 வரை அ.தி.மு.க அரசிலும் அமைச்சராக இருந்தார்.
1980 - 1983 வரையில் தி.மு.க அரசில் புதுச்சேரி முதல்வராக இருந்தார். அதற்கு பிறகு, 1990 - 1991 வரை தி.மு.க - ஜனதா தளம் கூட்டணியில் புதுச்சேரி முதல்வராக இருந்தார். இதில், 1984 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில், எம்.டி.ஆர். ராமச்சந்திரன் தி.மு.க மாநில அமைப்பாளராக இருந்தார். பின்னர் 1994 முதல் 1997 வரை அ.தி.மு.க புதுச்சேரி அமைப்பாளராக இருந்தார். இதைத்தாடர்ந்து, பின்னர், 2001 -2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார். கடந்த 2006 முதல் காங்கிரஸில் இருந்து வந்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன், வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். அண்மையில் வீட்டில் விழுந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுவை மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் சார்பில் முதலமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.