இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் 2-வது முதன்மை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சித் துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Former RBI governor Shaktikanta Das appointed Principal Secretary-2 to PM Modi
பி.கே மிஸ்ரா செப்டம்பர் 11, 2019 முதல் பிரதமரின் முதன்மை செயலாளராக இருந்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிரதமரின் 2-வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரவின்படி, சக்திகாந்த தாஸின் நியமனம் "பிரதமரின் பதவிக்காலத்துடன் இணை முனையமாக இருக்கும் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, எது முந்தையதோ அதுவாக இருக்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 பேட்ச் தமிழ்நாடு கேடரின் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், 2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் மத்திய வங்கியின் தலைவராக இருந்த ஆறு ஆண்டுகளில், கொரோனா தொற்று பரவல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டார். அவர் இந்தியாவின் ஜி20 ஷெர்பாவாகவும் செயல்பட்டார் மற்றும் 15வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, சக்திகாந்த தாஸ், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் என்ற பத்திரிக்கையால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் முதல் மூன்று மத்திய வங்கியாளர்களில் இடம் பிடித்தார். குளோபல் ஃபைனான்ஸ் மத்திய வங்கியாளர் அறிக்கைய 2024 இல் தாஸ் ‘A+’ மதிப்பீட்டைப் பெற்றார்.
அவர் தனது கடைசி செய்தியாளர் சந்திப்பில், பணவீக்கம்-வளர்ச்சி சமநிலையை மீட்டெடுப்பது ரிசர்வ் வங்கியின் முன்னால் உள்ள மிக முக்கியமான பணி என்று கூறியிருந்தார்.