பிகார் மாநிலத்தைப் பூா்விமாகக் கொண்டவரும், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகார் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங், காங்கிரஸ் எம்பி டாக்டா் நஸீா் ஹுசேன் ஆகியோர் முன்னிலையில் அவா் காங்கிரஸில் இணைந்தார்.
பிரஜ் கிஷோர் ரவி வரும் டிசம்பா் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவரது பதவிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.
1989 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரவி, பிகாரில் உள்ள சஹா்சா மாவட்டத்தைச் சோ்ந்தவா். தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
ஐ.நா. அமைதி காக்கும் படையுடன் இணைந்து பணியாற்றிய அவா், சமீப காலம் வரை தமிழக அரசின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு தலைமை அதிகாரியாக இருந்தார்.
காங்கிரஸில் சோ்ந்தது குறித்து பிரஜ் கிஷோர் ரவி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டில் வெறுப்புணா்வும், வகுப்புவாதமும், வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரங்களில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு நல்லதொரு தாக்கம் ஏற்பட்டுள்ளது.
நான் தேசிய அரசியலிலும், பிகார் மாநில அரசியலிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன். அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தோ்தலில் காங்கிரஸ் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். பாஜக தலைவா் அண்ணாமலைக்குப் போட்டியாக நான் தமிழக அரசியலில் ஈடுபடமாட்டேன்.
என்னுடைய அரசியல் தேசிய அளவிலும், பிகார் அளவிலும் இருக்கும். அதேவேளையில், அமைப்பு சார்பில் தமிழகத்தில் பதவி அளித்து பணியாற்றுமாறு கூறினால் தமிழகம் வருவேன், என்றார்.
பிரஜ் கிஷோர் ரவியின் தந்தை மறைந்த துல் மோகன் ராம், ஒரு சுதந்திர போராட்ட வீரா். பீகார் காங்கிரஸில் இருந்து மூன்று முறை எம்.பி.,யாகவும், ஒரு முறை எம்.எல்.ஏ.,வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி பணியாற்றி வந்த கருணா சாகர், சமீபத்தில் விருப்பு ஓய்வு பெற்று ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
கருணா சாகர் தற்போது அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். மேலும் இவர் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“