திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் தலைமையிலான முந்தைய அரசு கலந்ததாக ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவரது குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், 'சந்திரபாபு கடவுளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார்' என்று ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக முழு அறிக்கை கேட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பதில் கலப்பட நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையில், தான் தவறு செய்திருந்தால் தனது குடும்பம் அழிந்து போகட்டும் என்று கூறி திருப்பதி கோவிலில் சூடம் ஏற்றி ஆவேசமாக சத்தியம் செய்துள்ளார் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான பூமனா கருணாகர் ரெட்டி.
லட்டு கலப்படம் சர்ச்சை தொடர்பாக சத்தியம் செய்வதாக அறிவித்த பூமனா கருணாகர் ரெட்டி, நேற்று திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு திருமலைக்கு வந்தார். முதலில், புஷ்கரிணியில் புனித நீராடிவிட்டு, கோவிலின் பிரதான நுழைவாயில் முன் உள்ள அகிலாண்டம் சென்றார். அங்கு தேங்காயை உடைத்து சுவாமிக்கு சாத்தினார். கலப்பட நெய் கொள்முதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார். "நான் அப்படி ஒரு தவறான செயலைச் செய்திருந்தால், நானும் என் குடும்பமும் அழிந்துவிடுவோம்" என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிறகு, டி.எஸ்.பி விஜய்சேகர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி காரில் திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் தகவலின்படி, திருமலையில் உள்ள ஜி.என்.சி டோல்கேட்டில் பூமனாவை தடுத்து நிறுத்திய போலீசார், அரசியல் கருத்துகள் அல்லது பேச்சு எதுவும் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை அனுமதிப்பதாக தெரிவித்தனர். அவர்கள் பூமனாவிடம் எழுத்துப்பூர்வ எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“