வடக்கு டெல்லியின் கோட்வாலி பகுதியில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயலின் செல்போனை ஒரு நபர் பறித்துச் சென்ற ஒரு நாள் கழித்து, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை 2 பேரைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரின் செல்போனை பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சஜன் (22), அந்த செல்போனை பறித்து முகமது ஆசிப் (23) என்பவருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. டெல்லி துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) சாகர் சிங் கல்சி கூறுகையில், “மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அவருடைய பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சி.சி.டிவி-களை குழு ஆய்வு செய்தது. பின்னர் அந்த நபர் அடையாளம் காணப்பட்டு ஜமா மஸ்ஜித் பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.” என்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் தனது காரில் ஜமா மஸ்ஜித் பகுதிக்கு அருகே அமர்ந்திருந்தபோது, அவருடைய சாம்சங் கேலக்ஸி 9 போனை குற்றம்சாட்டப்பட்ட நபர் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சி.சி.டிவி காட்சிகளில் கோயல் காரில் அமர்ந்து ஜன்னல்களை கீழே இறக்கிவிட்டு யாரிடமோ போனில் பேசுவதைக் காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், நீல நிற சட்டை மற்றும் வெள்ளை தொப்பி அணிந்த ஒரு நபர் பின்னால் வந்து தனது தொலைபேசியைப் பறித்ததாக அவர் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். அப்போது, கோயலின் பாதுகாப்பு அதிகாரியும் காரில் இருந்தார்.
சஜன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர் தனது நண்பருக்கு 2,200 ரூபாய்க்கு போனை விற்றதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குற்றச் செயலின் போது சஜன் அணிந்திருந்த ஆடைகளையும் கைப்பற்றியுள்ளனர். “ஒரு கடையில் உதவியாளராக பணிபுரியும் அவரது நண்பர் ஆசிப்பை நாங்கள் கைது செய்தோம். அவரிடம் இருந்து திருடப்பட்ட போனை போலீசார் மீட்டனர். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர்களின் குற்ற பின்னணியை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"