கனடா நாட்டு எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் பனியில் உறைந்து உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், கனடா-அமெரிக்க எல்லையில் கைக்குழந்தை உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதர்கள், நிலைமை குறித்து அவசரமாக பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-கனடா எல்லையில் எமர்சன் பகுதி அருகே இந்தியாவை சேர்ந்த ஆண், பெண், இளைஞர், குழந்தை என 4 பேர் எல்லையை சட்ட விரோதமாக கடந்த போது, பனியில் உறைந்து இறந்த விட்டதாக அந்நாட்டு பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நான்கு பேரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்தச் சம்பவத்தில் மனிதர்களை கடத்தும் கும்பலை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும், மினசோட்டாவில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தகவலின்படி, அமெரிக்க எல்லையில் இரண்டு ஆவணமற்ற இந்திய குடிமக்களை அழைத்து சென்ற ஷாண்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ரோந்து படை, மேலும் ஐந்து இந்தியர்கள் கால்நடையாகப் பயணிப்பதைக் கண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர், மேலும் நான்கு பேரின் உடமைகளை வைத்திருந்ததை பார்த்துள்ளனர். அவர்கள் அனைவரும் மொத்தமாக எல்லையை கடக்க முயன்றபோது, குழுவில் இருந்து பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கனடா அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எல்லையில் இருந்து 40 அடி தூரத்தில் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil