Advertisment

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்; 4 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கைது

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸில் எம்.பி.பி.எஸ் படித்து வரும் 4 மாணவர்கள் கைது; விடைகளை கண்டறிய உதவியதாக சி.பி.ஐ நடவடிக்கை

author-image
WebDesk
New Update
cbi office

சி.பி.ஐ அலுவலகம் (கோப்பு படம்)

Santosh Singh

Advertisment

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எய்ம்ஸ் பாட்னாவில் இருந்து நான்கு எம்.பி.பி.எஸ் மாணவர்களை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

“சி.பி.ஐ எங்கள் மாணவர்களில் சிலரின் தொலைபேசி எண்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டது. பின்னர் அந்த எம்.பி.பி.எஸ் மாணவர்களை சி.பி.ஐ காவலில் வைத்தது,” என்று எய்ம்ஸ் பாட்னாவின் நிர்வாக இயக்குனர் கோபால் கிருஷ்ண பால் கூறினார். மாணவர்கள் சி.பி.ஐ.,க்கு ஒத்துழைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

நான்கு எம்.பி.பி.எஸ் மாணவர்களும், கசிந்த வினாத்தாள்களுக்கு விடைகளைக் கண்டறிய, வினாத்தாள் கசிவு மன்னன் சஞ்சீவ் முகியாவின் கும்பலால் ஈடுபடுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

“கசிந்த வினாத்தாளின் பி.டி.எஃப் (மென் நகல்) ஹசாரிபாக் மையத்திலிருந்து முகியாவின் விடைகளைக் கண்டறியும் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, மே 4 மற்றும் மே 5 இடைப்பட்ட இரவில் பாட்னாவின் புறநகரில் உள்ள கெம்னிசாக் விளையாட்டுப் பள்ளியில் மாணவர்கள் விடைகளை மனப்பாடம் செய்ய வைப்பதற்கு முன்பு இந்த மாணவர்கள் வினாத்தாளுக்கு விடைகளைக் கண்டறிய பணியமர்த்தப்பட்டிருக்கலாம்," என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது.

நான்கு மாணவர்களின் மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்த சி.பி.ஐ, அவர்களது விடுதி அறைகளுக்கும் சீல் வைத்துள்ளது.

இந்த மாணவர்கள் எய்ம்ஸ் போன்ற தலைசிறந்த நிறுவனத்தில் படித்து வருவதால், விடைகளைக் கண்டறியும் கும்பல் அவர்களை ஈடுபடுத்தியிருக்கலாம் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

தடுப்புக்காவலில் உள்ள நான்கு மாணவர்களில் மூன்று பேர் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், ஒருவர் இரண்டாம் ஆண்டு மாணவர்.

விசாரணைக்கு மாணவர்கள் தேவை என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, மூத்த எய்ம்ஸ் ஆசிரிய உறுப்பினர்கள் முன்னிலையில் மாணவர்கள் புதன்கிழமை அவர்களது விடுதி அறைகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஹசாரிபாக்கில் உள்ள தேசிய தேர்வு முகமையின் டிரங்கில் (பெட்டியில்) இருந்து நீட் வினாத் தாளைத் திருடியதாகக் கூறப்படும் ஜாம்ஷெட்பூரின் தேசிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 2017-ம் ஆண்டு சிவில் இன்ஜினியர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை சி.பி.ஐ கைது செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொகாரோவில் வசிக்கும் பங்கஜ் குமார், பாட்னாவில் இருந்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வினாத்தாளை திருட பங்கஜ் குமாருக்கு உதவியதாகக் கூறப்படும் ராஜு சிங்கையும் சி.பி.ஐ கைது செய்துள்ளது, ராஜூ சிங் ஹசாரிபாக்கில் இருந்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ, 6 எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது. பீகாரில் இருந்து பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் வினாத்தாள் கசிவு என்று கூறப்பட்டது, மீதமுள்ளவை குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேர்வர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் தொடர்பானவை.

மத்திய கல்வி அமைச்சகத்தின் குறிப்பு குறித்த சி.பி.ஐ. தானாக பதிந்த எஃப்.ஐ.ஆர், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து "விரிவான விசாரணை" தொடர்பானது.

இந்த வழக்கை கடந்த மாதம் பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் (EOU) இருந்து சி.பி.ஐ எடுத்துக் கொண்டது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் பிற தொடர்புடைய படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cbi NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment