ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த 40 பேர், நேற்று முன்தினம் தனியார் பேருந்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தனர். இவர்கள் அனைவரும் தரிசனத்தை முடித்து விட்டு திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சித்தூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டுருந்த பேருந்து, கங்கசாகரம் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பேருந்தில் பயணித்த அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செய்தி - க. சண்முகவடிவேல்