காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள செயல் திட்டத்தை (காவிரி மேலாண்மை வாரியம்) மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதுவே இறுதி என்பதால், மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக பாராளுமன்றத்தில் தம்பிதுரை தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்த 13 நாட்களாக தமிழக எம்.பி.க்களின் போராட்டத்தால், நாடாளுமன்றம் முடங்கியிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.