திருப்பதி மலைப் பாதையில் சுற்றித் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை இன்று (ஆகஸ்ட் 28) வனத்துறை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடைபாதை வழியாக பக்தர்கள் செல்வதும் வழக்கம். நடைபாதை காட்டு வழி பாதையாக இருக்கும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபாதை வழியாக சென்ற போது ஒரு சிறுவனை சிறுத்தை தாக்கியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவஸ்தான நிர்வாகம் நடைபாதை வழியாக வரும் பக்தர்களை எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியது.
தொடர்ந்து கடந்த 2 வாரத்திற்கு முன் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை தூக்கிச் சென்று கொன்றது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்தர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து தேவஸ்தான நிர்வாகம் நடைபாதை வழியாக வரும் பக்தர்களின் பாதுகாப்பை பலப்படுத்தியது. மலைப்பாதையில் 500க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தியது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்தனர்.
திருமலைக்கு நடந்து செல்லும் நடைபாதையில் வன விலங்குகள் அச்சம் இருக்கும் பகுதிகளில் வனக் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு ஒரு பயிற்சி பெற்ற பாதுகாவலர் உடன் சென்றனர்.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் நடைபாதை வழியாக திருமலை வரும் பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் கட்டுப்பாடுகள் விதித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் மலைப் பாதையில் சுற்றித் திரிந்த 3 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலை மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிடிபட்ட சிறுத்தை கூண்டில் ஆக்ரோஷமாக இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“