ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது என்று எந்த ஒப்பந்தமும் இல்லை என ராகுல் காந்தி மக்களவையில் பேசியதற்கு பிரான்ஸ் அரசாங்கம் பதில் அளித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானம் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது என்று எந்த ஒப்பந்தமும் இல்லை என பிரான்ஸ் அதிபரே என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்லிவிட்டார். மேலும், ரஃபேல் ஒப்பந்தம் ஏன் HAL-லிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, வாழ்க்கையில் ஒரு விமானம் கூட உருவாக்காத வேறு ஒரு நபருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தால் ஒரு தொழிலதிபர் மட்டும் ரூ.40,000 கோடி ரூபாய் பெற்று பயன் அடைய வைக்கப்பட்டுள்ளார். என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான்" என்று ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அரசு, "ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. இதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்து 2008ல் கையெழுத்திடப்பட்டதுதான்" என்று தெரிவித்துள்ளது.