கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கான உரிமை குறித்து இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இப்போது பரவலாக விவாதம் நடந்துவருகிறது. இது, மையமாக கவனத்தை ஈர்த்துள்ளநிலையில், கலை, பண்பாட்டு களத்தில் உள்ளவர்களைப் பற்றிய ஆய்வு முடிவொன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் களத்தில் உள்ளவர்கள், தொழில் பின்னடைவு ஏற்படும் என்பதற்காக, மனதில் உள்ளதைப் பட்டெனப் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ‘ஆர்ட்ஸ் புரொபெசனல்’ எனும் இதழ் நடத்திய கருத்து சுதந்திரம் குறித்த அந்த ஆய்வில், 500-க்கும் மேற்பட்டவர்கள் தம் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவதால் இடர்களைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர். பத்துக்கு எட்டு பேர் சொன்னது, ‘சர்ச்சைக்குரிய’, ’அசாதாரணமான அரசியல்’ கருத்துகளைப் பேசுவதால் தொழில்ரீதியாகப் பின்னடைவையும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுவோம் என்பதுதான். ஆகையால், நிறைய பேர் சுயதணிக்கைக்கு முயல்கின்றனர்.
இந்த சர்ச்சைக்குரிய சங்கதிகளில், வலதுசாரிக் கருத்தியலுக்கான ஆதரவும் அடங்கும் என்கிறது அந்த ஆய்வு. எங்கு வெவ்வேறு உலகப் பார்வைகளுடன் சுதந்திரமான சிந்தனையானது ஆதரித்து ஊக்குவிக்கப்படுகிறதோ அதே கலை-பண்பாட்டு புலத்தில்தான் இப்படியும் நடக்கிறது என்பது நகைமுரண்.
மேலும், மதம், பாலினம், பாலியல் ஆகியவை தொடர்பான விவாதங்கள், புதிதுபுதிதாக இடர்களை உண்டாக்குபவையாக மாறிவிட்டன என்றும் அதன்மூலம் தெரியவருகிறது. ஒருவர் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரவில்லை என்பதற்காக வறுத்தெடுக்கப்படக்கூடும்; இன்னொருவர் அந்த இடத்துக்கு வருகிறார் என்பதற்காக அவதூறுக்கு ஆளாகக்கூடும்; அந்த இடத்துக்கு சம்பந்தமில்லாமல் பேசினால் கடும் சொற்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஆய்வுக்காகக் கருத்துக்கூறியவர்களில், தங்களின் தனிப்பட்ட பார்வையும் கருத்துகளும் மதிக்கப்படுவதாக 40 விழுக்காட்டினரும், கொந்தளிப்பான பிரச்னைகள் குறித்து மனதில் பட்டதைப் பேசமுடிவதாக இரண்டு விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
டெய்லி மெயில் நாளேட்டுக்கு பேசியுள்ள ஆர்ட்ஸ் புரொபெசனல் இதழின் ஆசிரியர் அமந்தா பார்க்கர், ” கலை பண்பாட்டுப் புலத்தில் இருப்பவர்களின் யதார்த்தத்துக்கும் (அவர்களைப் பற்றிய) பொதுவான பார்வைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.” என்கிறார்.
”எந்த சமூகக்கூட்டத்தில் தாராள சிந்தனையும் வெள்ளந்தியான மனதும் சரிசமமும் இருப்பதாகக் கருதப்படுகிறதோ அந்த சமூகப்பிரிவில்தான் வற்புறுத்தலும் கொடுமைப்படுத்தலும் அச்சுறுத்தலும் சகிப்பின்மையும் நிலவுகிறது என்பதை எங்கள் ஆய்வு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது” என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், சிலர், தங்கள் சுயதணிக்கை பற்றி வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக உடன்பாடு செய்துகொள்ளப்படுவதாகவும் பணம்கூட தரப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மற்ற சிலரோ கைம்மாறுக்காக கருத்துசுதந்திரத்தைக் கைவிடும்படி ஆக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
தமிழில் : இர.இரா.தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.