Liz Mathew
நரேந்திர மோடி, ராமர் கோயில் விவகாரத்தில் முதல்நிலை பேராட்டத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர், இன்று நாட்டின் பிரதமர். அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக, யாருக்கும் விருப்பு, வெறுப்பில்லாத புதிய இந்தியாவை கட்டமைக்க ஆயத்தம் ஆகியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பீன் மூலம், நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. மோடியின் ஆட்சிக்காலத்திலேயே, ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் துளிர்விட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மூலம், யாருக்கும் விருப்பு வெறுப்பற்ற புதிய இந்தியா விரைவில் அமைய உள்ளது என்ற எண்ணம், இந்திய குடிமகன்களாகிய அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.
கடவுள் ராமர் பிறந்த அயோத்தியில், 16ம் நூற்றாண்டில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் கூறின. 1984ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
ராமர் கோயில் விவகாரத்தை, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும், தேர்தல் நலனுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ. தலைமை முடிவு செய்தது.
இந்த முடிவு, நல்ல பலனை தந்தது. 1989 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 89 இடங்களில் வென்றது. அப்போதைய பா.ஜ. தலைவர் அத்வானி, ராமர் கோயில் இயக்கத்தின் அடுத்தகட்டமாக ரத யாத்திரை செல்ல திட்டமிட்டார். அப்போது நரேந்திர மோடி, பா.ஜ. தேசிய தேர்தல் குழு உறுப்பினராக இருந்தார். 1990ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, அத்வானியின் ரதயாத்திரை, குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து மும்பை வரையிலான யாத்திரைக்கு மோடி,ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
2002ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார். அப்போது அயோத்தியில் கரசேவையை முடித்து இந்து பக்தர்கள் ரயிலில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கோத்ரா ரயில் விபத்தில் 59 கரசேவகர்கள் தீயில் கருகினர். இதனையடுத்து நாடுமுழுவதும் பெரும்கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். இந்த நிகழ்வு, மோடி ஆட்சிக்கு பெரும் களங்கமாக விளங்கியது.
மோடியின் பெயருக்கு ஒரு வடுவாக இந்த நிகழ்வு மாறியது. 2007 குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடியை மரண வியாபாரி என்று நேரடியாகவே விமர்சித்தார். முன்னதாக இந்த வார்த்தையை, நிதீஷ் குமார் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2004 லோக்சபா தேர்தலில், குஜராத் வன்முறை, பா.ஜ.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குஜராத் வன்முறைக்கு பிறகு, மோடி சிறிதுகாலம் கட்சியினரால் ஓரங்கட்டப்பட்டார். பின் மீண்டும் அத்வானியே, மோடியை முன்னிலைப்படுத்த துவங்கினார்.
அத்தகைய மோடி, இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். மோடி இந்த்துத்துவா தலைவர் என்றாலும், 2014 லோக்சபா தேர்தலில், அவர் அதை முன்னிலைப்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி பிரசாரம் செய்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில், அரசியல் சட்டப்பிரிவுகளின் படி, ராமர் கோயில் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2017ல் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், ராமர் கோயில் விவகாரம் முக்கிய காரணியாக அமைந்தது. 2016ம் ஆண்டில் மத்திய அரசு, அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2014 லோக்சபா தேர்தலின் போது மோடி ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்திருந்தபோதிலும், அவர் அயோத்தி செல்லவே இல்லை.
அயோத்தி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையொட்டி, நாட்டு மக்களிடம், 'டிவி' வாயிலாக, பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: அயோத்தி தீர்ப்பு மூலம், இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நீதி, நியாயத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வலிமையான அமைப்பு உச்ச நீதிமன்றம் என, நிரூபணமாகி உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற, இந்திய கலாசாரத்திறகு, இந்த நாள், சிறந்த நாளாகும். மக்களாட்சி வலிமையாக தொடர்வதை, இந்தியா, உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளது.
நவம்பர், 9-ம் தேதி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட நாள். அதேநாளில், அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும், ஒற்றுமையுடன், இணைந்த கரங்களோடு, முன்னோக்கி நடைபோட வேண்டும் என்பதே, நவம்பர், 9-ம் தேதி விடுக்கும் செய்தி யாகும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.