தமிழகத்தில் இருக்கும் யானைகள் அனைத்தையும் முதுமலை மற்றும் டாப்ஸ்லிப் பகுதியில் புத்துணர்ச்சி மையத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அடிக்கடி நடக்கும் இந்நிகழ்வு நமக்கு பழகிப் போன்ற ஒன்று. ஆனால் நாட்டில் முதன்முறையாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு புலிகளை இடம் மாற்றுகின்றார்கள் . மத்திய இந்தியாவில் இருந்து கிழக்கு இந்தியாவிற்கு ஆறு புலிகளை (மூன்று இணைகளை) இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளனர் இந்திய வனத்துறையினர். ஒடிசாவில் இருக்கும் சட்கோசியா புலிகள் காப்பகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் படியாக, மத்தியப் பிரதேசத்தின் கன்ஹா புலிகள் காப்பகத்தில் இருந்து நேற்று மூன்றரை வயதான ஒரு ஆண்புலியினை ஒடிசா மாநிலத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் வன காவலர்கள். கன்ஹா காப்பகத்தில் மட்டும் சுமார் 105ல் இருந்து 107 புலிகள் வரை உள்ளது. புலியினை, விலங்குகள் நல மருத்துவர்கள் முன்னிலையில் பிடித்து, அதன் எடை, நீளம், அதன் உடல் வெப்ப நிலை ஆகியவற்றையும் அளந்து பின்னர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒடிசாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
கன்ஹா புலிகள் காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட எம்பி2 புலி
எம்.பி.2 என்று அழைக்கப்படும் இந்த ஆண் புலி சுமார் 22 மணிநேர பயணத்திற்கு பின்னர் 680 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒடிசாவின் காப்பகத்தில் விடப்படும். இதனுடைய இணையினை மழைக்காலம் முடிந்த பின்னர் மத்திய பிரதேசத்தில் இருந்து ஒடிசாவிற்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறியுள்ளார் கன்ஹா காப்பகத்தின் தலைமை அதிகாரி. மற்ற இரண்டு இணைகளை பந்தவர்ஹ் மற்றும் பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் இருந்து ஒடிசாவிற்கு எடுத்துச் செல்வார்கள்.
புலிகள் மற்றும் இதர வனவிலங்குகளின் எண்ணிக்கை காப்பகத்தில் குறையும் போது, வெவ்வேறு இடங்களில் இருந்து அவ்வுயிரினங்களை காப்பகத்திற்கு இடம் மாற்றி, வளர்த்து அதன் எண்ணிக்கையினை உயர்த்துவது வழக்கத்தில் இருக்கும் ஒன்று தான். 2009ஆம் ஆண்டு பன்னா வன உயிரிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்த போது இது போன்ற நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். தற்போது மொத்தம் 30 புலிகள் அங்கே வாழ்ந்து வருகின்றது.
குஜராத்தின் கிர் காடுகளில் மட்டும் காணப்படும் ஆசிய சிங்களின் மற்றோரு வசிப்பிடமாக மத்தியப் பிரதேசம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று வனத்துறையினர் எதிர்பார்த்தார்கள். இது தொடர்பாக 2013ம் ஆண்டு குஜராத்தின் சிங்கங்களை மத்தியப் பிரதேசத்தில் வளர்ப்பதற்கு தர வேண்டும் என்று குஜராத் அரசினை உச்ச நீதி மன்றம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.