கடந்த 6 ஆண்டுகளாக இந்திய காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 முன்னாள் முதல்வர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள், கட்சியில் அடிப்படை மாற்றங்கள் வேண்டி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பாஜக வளர்ச்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு ஆகியவற்றை ஒப்புக் கொண்டதோடு, ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சயின் மீது நம்பிகையையற்ற சூழல் உருவாகியிருப்பது கவலைக்குரிய விஷயம் எனவும் தெரிவித்தனர்.
அரசியில் களத்தில் அனைவராலும் அறியப்பட்ட, முழு நேரமும் துடிப்பாக செயல்படும் ஒரு சிறந்த தலைமை வேண்டும் என்று கோரிக்கையை கடிதம் முன்னெடுக்கிறது. அதைத் தாண்டி, காங்கிரஸ் செயற்குழுவில் மீண்டும் தேர்தலை நடத்துவது, கட்சியின் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கான நிறுவனம் சார்ந்த நடைமுறையை உடனடியாக உருவாக்குவது போன்ற கோரிக்கைகளுக்கும் இடம்பெற்றுள்ளன.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் - குலாம் நபி ஆசாத்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் - ஆனந்த் சர்மா, கபில் சிபல், மனிஷ் திவாரி, சஷி தரூர்; எம்.பி. விவேக் டங்கா; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலர்கள் மற்றும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் - முகுல் வாஸ்னிக், ஜிதின் பிரசாதா ; முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் - பூபிந்தர் சிங் ஹூடா, ராஜேந்தர் கவுர் பட்டல், எம்.வீரப்பா மொய்லி, பிருத்விராஜ் சவான், பி.ஜே குரியன், அஜய் சிங், ரேணுகா சவுத்ரி, மிலிந்த் தியோதா; முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் - ராஜ் பப்பர் (உ.பி.), அரவிந்தர் சிங் லவ்லி (டெல்லி), கவுல் சிங் தாக்கூர் (இமாச்சலப் பிரேதேசம்); தற்போதைய பீகார் மாநில காங்கிரஸ் பிரச்சார குழுத் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், முன்னாள் ஹரியானா சபாநாயகர் குல்தீப் சர்மா; டெல்லி முன்னாள் சபாநாயகர் யோகானந்த் சாஸ்திரி; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீட்சித் ஆகியோர் கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
காங்கிரஸ் மீட்சி, இந்த தேசத்தின் அவசியத் தேவை என்று தெரிவிக்கும் அதே வேளையில், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியான மிகப்பெரிய சவால்களை இந்த தேசம் எதிர்கொள்ளும்வேளையில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு சரிவை நோக்கி செல்கிறது என்பதையும் இந்த கடிதம் அடிக்கோடிட்டு காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்; பாஜக, சங்க பரிவாரின் வகுப்புவாதம் மூலம் பிளவுபடுத்தும் குறிக்கோள்; பொருளாதார மந்தநிலை; வேலைவாய்ப்பின்மை ; பெருந்தொற்று உருவாக்கிய அபாயங்கள்; எல்லை மோதல் நிலைமை; வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் போன்றவைகள் கடிதத்தில் பட்டியலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரத்தைப் பரவலாக்குதல் (பல்முனைப்படுத்தல்), மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அதிகாரப்படுத்துதல், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தலைக் கொண்டு வருதல், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவை உடனடியாக அமைத்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை, கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல் போன்றவை தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்தது மட்டுமல்லாமல், கட்சியை பலவீனப்படுத்தியுள்ளன என்றும் தலைவர்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். முக்கியமாக, பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்தை ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்க காங்கிரஸ் செயற்குழு கட்சியை "திறம்பட வழிநடத்தவில்லை" என்று கடிதத்தில் கூறப்பட்டதாக அறியப்படுகிறது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டங்கள், அவ்வப்போது ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான ஒரு குறியீடாக மட்டுமே உள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் பெருமளவில், தலைவர் சோனியா காந்தி உரையாற்றும் இடமாகவும், இரங்கல் தெரிவிக்கும் கூட்டமாகவும் சுருங்கிவிட்டன என்று தலைவர்கள் கடிதத்தில் தெரிவித்தனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இனியும் விவாதங்கள் நடைபெறத் தேவையில்லை என்று அவர்கள் கடிதத்தில் வாதிட்டதாக அறியப்படுகிறது. தேசிய வளர்ச்சிக்கான திட்டங்களையும், தேசியக் கொள்கை உருவாக்குவதற்கான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதாக அறியப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியை சந்தித்து ஒரு வருடம் நிறைவடைந்த பிறகும் கூட, 'வீழ்ச்சிக்கு' காரணமென்ன? ஏன் தொடர்ச்சியான வீழ்ச்சியை சிந்தித்து வருகிறோம், போன்ற ஆழமான சுயபரிசோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
முக்கிய பிரச்சனையாக கடிதத்தில்," மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அலுவலர்களின் நியமனங்கள் தேவையற்ற முறையில் தாமதமாகுதல், மாநிலத்தில் மரியாதை, செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் சரியான நேரத்தில் நியமிக்கப்படுவதில்லை, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுக்கு கட்சிச் சார்ந்த முடிவுகள் எடுக்க சுதந்திரம் வழங்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.