ஜி20 அமைப்பில் உறுப்பு நாடுகளாக இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், பருவநிலை மாற்றம் குறித்து பக்கம் பக்கமாக பேசும் இந்த ஜி20 நாடுகள் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் புதைபடிவ எரிபொருட்களுக்கு (fossil fuels) ஆதரவு அளிக்கும் விதமாக 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை (தோராயமாக ரூ. 116 லட்சம் கோடி) பொதுநிதியில் இருந்து வழங்கியுள்ளன என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
'ஃபேன்னிங் தி ஃபிளேம்ஸ்: ஜி20 புதைபடிவ எரிபொருட்களுக்கான சாதனை படைக்கும் நிதி ஆதரவை வழங்குகிறது' என்கிற தலைப்பில் நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IISD) மற்றும் கூட்டாளர்கள் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்ட நிலையில், இன்று புதன் கிழமை (ஆகஸ்ட் 23) அதன் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அந்த அறிக்கையில், 'புதைபடிவ எரிபொருள் மானியங்கள் (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்), அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் முதலீடுகள் (322 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து (50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கடன் வழங்குதல் ஆகியவை அடங்கும்' என்று கூறுகிறது. மேலும், இது 2019ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு முந்தைய மற்றும் எரிபொருட்கள் நெருக்கடி நிலைகளை விட இரண்டு மடங்கு அதிகம்' என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
வருகிற செப்டம்பர் 9-10 தேதிகளில் ஜி20 நாடுகளின் 20 பேர் கொண்ட குழு டெல்லியில் கூடி, பருவநிலை மாற்றம் குறித்து ஒருமித்த கருத்தைப் பெற முயற்சிக்கும் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிக்கை வந்துள்ளது. "இந்த புள்ளிவிவரங்கள், காலநிலை மாற்றத்தின் பெருகிய முறையில் பேரழிவு தரும் தாக்கங்கள். இருந்தபோதிலும், ஜி20 அரசாங்கங்கள் புதைபடிவ எரிபொருட்களில் பெருமளவிலான பொதுப் பணத்தைத் தொடர்ந்து செலுத்தி வருகின்றன என்பதை நினைவூட்டுகின்றன.
நமது புதைபடிவ அடிப்படையிலான ஆற்றல் அமைப்புகளை மாற்றும் சக்தியும் பொறுப்பும் ஜி20 நாடுகளுக்கு உண்டு. டெல்லி தலைவர்களின் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் புதைபடிவ எரிபொருள் மானியங்களை வைப்பது மற்றும் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான அனைத்து பொது நிதிகளையும் அகற்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது,'' என ஐ.ஐ.எஸ்.டி-யின் மூத்த அசோசியேட்டும், முதன்மை ஆசிரியருமான தாரா லான் கூறினார்.
நாட்டின் வருமானத்தைப் பொறுத்து குறைந்தபட்ச கார்பன் வரிவிதிப்பு அளவை 25–75 அமெரிக்க டாலர்கள்/tCO2e என அமைப்பதன் மூலம் ஜி20 உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்ட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள புதைபடிவ எரிபொருட்கள் மீதான வரிகள் தற்போது சமூகத்திற்கு அவற்றின் செலவுகளை பிரதிபலிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது. பல உறுப்பு நாடுகள் ஆற்றல் நெருக்கடியின் உச்சத்தில் கடந்த ஆண்டு பெற்ற சாதனை லாபத்தின் மீது வீழ்ச்சி வரிகளை விதிக்கத் தவறிவிட்டனர் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி 20 உறுப்பு நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக கடுமையாக பேசியும், நடவடிக்கை எடுத்தும் வருகின்றன. அதேவேளையில், கடந்த ஆண்டில் புதைபடிவ எரிபொருட்களை ஆதரிக்க 1.4 டிரில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இது பருவநிலை மாற்ற மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil