திகார் சிறையில் கேங்க்ஸ்டர் தில்லு தாஜ்பூரியா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல கேங்க்ஸ்டர் தில்லு தாஜ்பூரியா கடந்த வாரம் தனது எதிராளிகளால் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியைச் சேர்ந்த சுனில் மன் என்கிற தில்லு தாஜ்பூரியா ஆள் கடத்தல், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் 2-ம் தேதி அதிகாலை தில்லு தாஜ்பூரியாயின் கூட்டாளிகளுக்கும் மற்றொரு பிரபல கேங்ஸ்டராக இருந்த ஜிதேந்தர் கோகி கூட்டாளிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் இரும்புக் கம்பிகளால் சரமாரியாகத் தாக்கி கொண்ட நிலையில், தனியாக சிக்கிய தில்லு தாஜ்பூரியாவை, ஜிதேந்தர் கோகியின் கூட்டாளிகளான யோகேஷ், தீபக் தீத்தர் ஆகியோர் இரும்புக்கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நீதிமன்ற வளாகத்தில் பிரபல கேங்ஸ்டர் ஜிதேந்தர் கோகி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு தில்லு தாஜ்பூரியா திட்டம் வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்கும் நோக்கில் தாஜ்பூரியா கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
உயர் மட்ட குழு விசாரணை
இந்நிலையில், திகார் சிறை கொலை சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானது. சம்பவத்தன்று தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறையினர் சிறை பாதுகாப்பில் இருந்தனர். கைதிகளுக்கு இடையேயான மோதலை தடுக்காமல் தில்லு தாஜ்பூரியாவை கொலை செய்யும் வரை போலீசார் வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனடிப்படையில் பாதுகாப்பு பணியில் இருந்த 7 சிறப்பு படை காவல்களை தமிழக காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, கூடுதல் டைரக்டர் ஜெனரல் அந்தஸ்து பெற்ற அதிகாரி தலைமையில், உயர் மட்ட குழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தங்களிடம் ஆயுதம் ஏதும் இல்லாததால் தடுக்க முடியாமல் போனதாக காவலர்கள் கூறினர். ஆனால் தாக்குதலைத் தடுக்க அவர்கள் குறைந்தபட்சம் தங்களது லத்திகளையாவது பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது, இருப்பினும் அவர்கள் இதற்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் தீவிர விசாரணையில் உள்ளது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“