உத்தரப் பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களின் கண் முன்னால் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், காஸியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி அவருடைய மகள்களின் கண் முன்னாள் திங்கள்கிழமை இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து போலீசார் கூறுகையில், “கடந்த 24 மணி நேரமாக நேருநகரில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விக்ரம் ஜோஷி அதிகாலை 4.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
தனது உறவினரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சில ஆண்கள் மீது புகார் அளித்த 4 நாட்களுக்கு பின்னர் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார். அவரது இறுதி சடங்குகள் காஸியாபாத்தில் மேற்கொள்ளப்படும் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திறு தனது இரங்கலைத் தெரிவித்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். மாநில அரசு பத்திரிகையாளரின் மனைவிக்கு அரசு வேலையை அறிவித்ததுடன், அவரது 3 குழந்தைகளுக்கும் இலவச கல்வியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
விஜய், மோஹித், தல்வீர், ஆகாஷ், யோகேந்திரா, அபிஷேக் மோட்டா, அபிஷேக், ஷாகிர் மற்றும் முக்கிய குற்றவாளியான ரவி ஆகியோரை இதுவரை 9 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து காஸியாபாத் எஸ்.எஸ்.பி கலாநிதி நைதானி இன்று கூறுகையில், “நாங்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளோம், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் நாங்கள் மீட்டுள்ளோம். டிஎஸ்பி அளவிலான அதிகாரிகளின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர் கொலை வழக்கில் போலீஸ் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஊடகவியலாளர்கள் குழு விஜய் நகரில் போராட்டம் நடத்தினர்.
பத்திரிகையாளர் மரணத்தை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை தாக்கினார். “மக்களுக்கு ராம ராஜ்ஜியம் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, குண்டர்கள் ராஜ்ஜியம் அளிக்கப்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.
अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।
वादा था राम राज का, दे दिया गुंडाराज।
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020
இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார். அதில், “தனது மருமகள் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். துயரத்தில் உள்ள குடும்பத்திற்கு எனது இரங்கல். ராம ராஜ்ஜியம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், குண்டர் ராஜ்ஜியம் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேச அரசாங்கத்தை தாக்கிப் பேசியுள்ளார். “காஸியாபாத் என்.சி.ஆரில் உள்ளது. இங்கே சட்டம் ஒழுங்கு இப்படி இருந்தால், அது மாநிலம் முழுவதும் எப்படி இருக்கும் என்று ஒருவர் யூகிக்கலாம். ஒரு பத்திரிகையாளர் தனது மருமகளை ஈவ் டீஸிங் செய்ததாக புகார் அளித்ததற்காக அவர் சுடப்பட்டுள்ளார். இந்த ‘காட்டாட்சி யில் ஒரு சாதாரண மனிதன் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸை விட ‘கிரைம் வைரஸ்’ மிகவும் வேகமாக செயல்படுகிறது – மாயாவதி விமர்சனம்
மாநில அரசை விமர்சித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸை விட குற்றவாளிகளால் பரவும் “கிரைம் வைரஸ்” மிக வேகமாக செயல்படுகிறது” என்று கூறினார்.
पूरे यूपी में हत्या व महिला असुरक्षा सहित जिस तरह से हर प्रकार के गंभीर अपराधों की बाढ़ लगातार जारी है उससे स्पष्ट है कि यूपी में कानून का नहीं बल्कि जंगलराज चल रहा है अर्थात् यूपी में कोरोना वायरस से ज्यादा अपराधियों का क्राइम वायरस हावी है। जनता त्रस्त है। सरकार इस ओर ध्यान दे।
— Mayawati (@Mayawati) July 22, 2020
“கொலை போன்ற கொடூரமான குற்றங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தடையின்றி தொடர்கின்றன. சட்டம் ஒழுங்குக்கு பதிலாக உ.பி.யில் காட்டாட்சி நிலவுகிறது என்பது தெளிவாகிறது. உ.பி.யில் கொரோனா வைரஸை விட குற்றவாளிகளின் குற்ற வைரஸ் மிகவும் வேகமாக செயலில் உள்ளது. மக்கள் பதற்றமடைந்துள்ளனர், அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும்” என்று மாயாவதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திங்கள்கிழமை இரவு என்ன நடந்தது?
’ஜன் சாகர் டுடே’ பத்திரிகையில் பணிபுரியும் விக்ரம் ஜோஷி, தனது இரண்டு மகள்களுடன் பிரதாப் விஹாரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குழுவினர் அவரைத் தாக்கி, பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அவர் யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஐ.சி.யுவில் ஆபத்தான நிலையில் இருந்தார்.
போலீஸ் செயல்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு
தங்களுடைய ஆரம்ப புகாரை போலீசார் விசாரிக்கவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்டவரின் இருப்பிடம் குறித்து மட்டுமே ஒரு போலீஸ் குழு விசாரித்ததாக அவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜூலை 17 ம் தேதி, எஸ்.எஸ்.பி அலுவலகத்திற்கு நடவடிக்கை எடுக்க கோரி ஒரு கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டதாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
பாலியல் வன்கொடுமை புகார் ஜூன் 16ம் தேதி அளிக்கப்பட்டதாகவும் அதே நாளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். காஸியாபாத் எஸ்.எஸ்.பி கலாநிதி, விஜய்நகர் காவல் நிலைய எஸ்.ஐ ராகவேந்திராவை கடமையை செய்யத் தவறியதற்காக சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும், ஏன் நடவடிக்கை தாமதமானது என்பதை அறிய டிஎஸ்பி அளவிலான ஒரு அதிகாரியின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.