Advertisment

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவில் ஆசாத்; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; மீண்டு வருவாரா ஆசாத்?

தேர்தல் குழுவில் ஆசாத் இடம்பெற்றிருப்பது அவர் "உண்மையான பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபர்" என்பதை தெளிவுப்படுத்துகிறது - காங்கிரஸ், பி.டி.பி; அவரது பரந்த அரசியல் அனுபவமே காரணம் - பா.ஜ.க மற்றும் ஆசாத்தின் கட்சியான டி.பி.ஏ.பி விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ghulam nabi azad

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் (கோப்பு படம்)

Arun Sharma

Advertisment

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டி.பி.ஏ.பி) தலைவருமான குலாம் நபி ஆசாத், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றிருப்பது ஜம்மு மற்றும் காஷ்மீரில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜம்மு & காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி, அரசாங்கத்தின் நடவடிக்கை குலாம் நபி ஆசாத் ஒரு "உண்மையான பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபர்" என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மிகவும் நம்பும் மக்களில் குலாம் நபி ஆசாத் இருப்பதாக விகார் ரசூல் வானி ஞாயிற்றுக்கிழமை கூறினார். 2021 ஆம் ஆண்டு ராஜ்யசபாவில் இருந்து குலாம் நபி ஆசாத்தின் பிரியாவிடையின் போது மோடி கண்ணீர் சிந்தியது எந்த காரணமும் இல்லாமல் இல்லை. "இருவருக்கும் இடையே உள்ள தொடர்புக்கு இதுவே சான்று" என்று விகார் ரசூல் வானி கூறினார்.

இதையும் படியுங்கள்: ’2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும்; பொருளாதாரம் மேலும் சிறப்பாக இருக்கும்’; மோடி சிறப்பு பேட்டி

குலாம் நபி ஆசாத்தின் விசுவாசிகள் பலர் காங்கிரஸுக்குத் திரும்பியதைச் சுட்டிக் காட்டிய விகார் ரசூல் வானி, அவர்கள் மதச்சார்பற்ற குலாம் நபி ஆசாத்தின் பக்கம் இருந்தார்கள், ஆனால் அவர் "நாக்பூர் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்)" மற்றும் "மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரிக்க" பா.ஜ.க.,வால் பயன்படுத்தப்படுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது, என்றும் கூறினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜஹான்சைப் சிர்வால் கூறுகையில், குலாம் நபி ஆசாத்தின் நியமனம் பா.ஜ.க உடனான அவரது நீண்டகால தொடர்பை காட்டுகிறது. மேலும், “ராஜ்யசபாவின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவை அவர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர், அவர் எளிமையான பின்னணியில் இருந்து இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியை வழிநடத்தும் குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். குலாம் நபி ஆசாத் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாதபோது அவருக்கு ஏன் இத்தகைய சிறப்புரிமை அளிக்கப்படுகிறது என்ற கேள்வியை இது எழுப்புகிறது,” என்றும் டாக்டர் ஜஹான்சைப் சிர்வால் கூறினார்.

மக்கள் ஜனநாயக கட்சியின் (பி.டி.பி) செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான ஃபிர்தௌஸ் தக் கூறுகையில், “வரும் 2024 பொதுத் தேர்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வைத்திருப்பது தெளிவாக உள்ளது, மேலும் அவரது திட்டத்திற்கு யார் பொருந்துகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்,” என்று கூறினார். குழுவை "கண்துடைப்பு" என்று வர்ணித்த ஃபிர்தௌஸ் தக், "ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்தின் சோதனை தோல்வியடைந்ததை உணர்ந்து, பிரதமர் இப்போது தனது நண்பருக்கு அரசியல் ரீதியாக மறுவாழ்வு அளித்து, தேசிய அரசியலுக்கு தனது நெருங்கிய நம்பிக்கையாளரை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்." என்றும் கூறினார்.

தேசிய மாநாட்டு (NC) தலைவர்கள் குலாம் நபி ஆசாத் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்தாலும், BJP மற்றும் குலாம் நபி ஆசாத்தின் DPAP கட்சி அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தியது.

பா.ஜ.க.,வின் ஜம்மு & காஷ்மீர் தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், "குலாம் நபி ஆசாத் அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை காங்கிரஸ் கட்சியில் கழித்ததற்காக அவருடன் எங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. “நாங்கள் அரசியல் எதிரிகள் என்றாலும், பல ஆண்டுகளாக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர் நம் நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதி. அவர் பலமுறை மத்திய அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீர் முதல்வராகவும் இருந்துள்ளார்,” என்று கூறினார்.

மேலும், தேர்தல் அரசியலில் குலாம் நபி ஆசாத்தின் பரந்த அனுபவமும், கமிட்டியில் அவர் இடம்பெற்றிருப்பதும் "நல்ல ஆரோக்கியமான ஜனநாயகத்தின்" ஒரு பகுதியாகும் என்று ரவீந்தர் ரெய்னா கூறினார்.

டி.பி.ஏ.பி பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எஸ் சிப், குழுவில் சேர்வதில் எந்தத் தவறும் இல்லை என்றும், குலாம் நபி ஆசாத் சேர்க்கப்பட்டிருப்பது அவரது நீண்ட கால நாடாளுமன்ற அனுபவம் மற்றும் மந்திரி பதவியுடன் தொடர்புடையது என்றும் கூறினார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, 15வது நிதி ஆணையத் தலைவர் என்.கே சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை "பா.ஜ.க குழு" என்று அழைக்க முடியாது என்றும் ஆர்.எஸ் சிப் கூறினார்.

ஜம்மு மாகாணத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், டி.பி.ஏ.பி துணைத் தலைவருமான அசோக் ஷர்மா கூறுகையில், குலாம் நபி ஆசாத் குழுவில் இடம் பெற்றுள்ளதால் அவர் பா.ஜ.க.,வுடன் நெருக்கமாகிறார் என்று அர்த்தம் இல்லை, என்று கூறினார். மேலும், "இது ஒரு அரசாங்க குழு மற்றும் அவர்கள் அவரை ஒரு அறிவார்ந்த நபராகப் பார்த்து அவரது பெயரைச் சேர்த்தனர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் போன்ற ஒருவரின் தலைமையிலான கமிட்டியில் ஒருவர் அங்கம் வகிப்பது மரியாதைக்குரியது” என்றும் அஷோக் வர்மா கூறினார்.

குலாம் நபி ஆசாத்தின் பரந்த அரசியல் அனுபவமும், நாடு முழுவதும் உள்ள பல எதிர்க்கட்சித் தலைவர்களுடனான அவரது நீண்டகால தொடர்பும் அவர் குழுவில் இடம் பெறுவதற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றாகும். ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் (ஜே.கே.ஏ.பி) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மஞ்சித் சிங், குலாம் நபி ஆசாத் குழுவில் இணைந்ததில் எந்தத் தவறும் இல்லை என்றார். முன்னாள் ஜே.கே.ஏ.பி தலைவர் விக்ரம் மல்ஹோத்ராவும், குலாம் நபி ஆசாத் ஒரு முஸ்லீம் முகமாக இருப்பதைத் தவிர "எதிர்க்கட்சி அரசியல் மற்றும் அரசாங்கத்தில்" அவருக்கு பரந்த அனுபவத்தின் காரணமாக குழுவில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார்.

குழுவில் குலாம் நபி ஆசாத் சேர்க்கப்படுவது DPAP கட்சியின் அடித்தளத்தை மேலும் சிதைக்கக்கூடும், இது கடந்த ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து பல மூத்த தலைவர்கள் மற்றும் ஆசாத்தின் நெருங்கிய நம்பிக்கையாளர்களின் விலகலைத் தொடர்ந்து ஏற்கனவே தலைகீழாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆசாத் மற்றும் அவரது கட்சி முன்னிலையில் இருந்த கிஷ்த்வார், தோடா மற்றும் ராம்பன் மாவட்டங்களை உள்ளடக்கிய செனாப் பள்ளத்தாக்கில் கூட, முன்னாள் அமைச்சர்கள் ஜி.எம் சரூரி மற்றும் அப்துல் மஜித் வானி போன்ற சில தலைவர்களை மட்டுமே ஆசாத் கொண்டுள்ளார். அவரது விசுவாசிகளில் பெரும்பாலானோர் காங்கிரஸுக்குத் திரும்பியதாலும், அவரது அரசியல் சோதனை தோல்வியடைந்ததாலும், ஆசாத் மீண்டும் தேசிய அளவில் ஒரு பாத்திரத்தை வகிக்க விரும்புவார், மேலும் ராம்நாத் கோவிந்த் குழு அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

India Jammu And Kashmir Gulam Nabi Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment