ஒருவர் நாடாளுமன்றத்தில் மூத்தத் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர். மற்றொருவர் நாட்டின் பிரதமர். அரசியலில் நேரெதிர் துருவங்களாக செயல்படும் இருவருக்கும் இடையேயான நட்புறவை கடந்தாண்டு (2021) பிப்ரவரி 9ஆம் ஆண்டு இந்த நாடே உற்றுநோக்கியது.
அப்போது குலாம் நபி ஆஸாத்தை பிரதமர் நரேந்திர மோடி, “உண்மையான நண்பர்” எனப் பாராட்டினார். மேலும், “உயர் பதவி, அதிகாரம் ஆகியவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து குலாம் நபி ஆஸாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர் தனது கட்சியின் செயல்பாடுகள் குறித்து கவலைக்கொள்கிறார். நாடாளுமன்ற சபையை சுமூகமாக நடத்த எண்ணுகிறார். நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார். அவரது பணி அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும்” என்றார்.
தொடர்ந்து, 2005ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் குஜராத்திகள் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சி வசப்பட்டார்.
அக்காலக்கட்டத்தில் குஜராத்தில் முதலமைச்சராக நரேந்திர மோடியும், ஜம்மு காஷ்மீர் தலைமைப் பொறுப்பில் குலாம் நபி ஆஸாத்தும் இருந்தனர். அச்சமயம், குலாம் நபி ஆஸாத் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் தொடர் முயற்சிகள் மற்றும் பணிகளை என்னால் மறக்க முடியாது.
பயங்கரவாதிகளிடம் சிக்கியவர்கள் தனது சொந்த குடும்பத்தினர் போல அவர்கள் கவலையுற்றனர் என்றார். அத்துடன், “தாம் ஒரு நண்பராக குலாம் நபி ஆஸாத்தை மதிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் கதவு எப்போதும் திறந்திருக்கும். உங்களை நான் மதிக்கிறேன், உங்களது கருத்துகளை எதிர்பார்ப்பேன்” என்றார்.
அந்த 13 நிமிட பேச்சில் பிரதமர் நரேந்திர மோடி நான் உங்களை ஓய்வு பெற விட மாட்டேன் என்றார். முன்னதாக குலாம் நபி ஆஸாத் உள்பட 23 காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதத்திலும் பிரதமர் நரேந்திர மோடியை, குலாம் நபி ஆஸாத் வெகுவாக பாராட்டியிருந்தார். அப்போது 2020ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னர் பிரியாவிடை நிகழ்வில் பேசிய குலாம் நபி ஆஸாத், “2005ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் என்னை உலுக்கியது. சுற்றுலாப் பயணிகளாக இங்கு வந்தவர்களின் உடல்களை அவர்களது சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளிடம் ஒப்படைத்தோம்.
நான் அப்போது இறைவனிடம் பிரார்த்தித்தேன். பயங்கரவாதம் முடிவுக்கு வந்தது” என்றார். அத்துடன் பிரிவினைவாதம் குறித்தும் குலாம் நபி ஆஸாத் பேசினார். அப்போது பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டகாரர்களுள் நானும் ஒருவன்.
நான் ஒரு இந்துஸ்தானி இஸ்லாமியன் என்பதில் மட்டற்ற பெருமிதம் கொள்கிறேன். நான் உறுதியாக சொல்வேன், உலகம் போற்றும் ஒரு முஸ்லீம் இந்தியனாக இருப்பான்” என்றார்.
மேலும் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்று சென்றுவிடக் கூடாது எனக் கூறிய குலாம் நபி ஆஸாத், காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டத்தையும் உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுத்த குரலில் பேசினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து பேசுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் நீங்கள் நிறைய செயலாற்றியுள்ளீர்கள். தீபாவளியாக இருக்கட்டும் ரம்ஜான் ஆக இருக்கட்டும் என்னை முதலில் அழைப்பது நீங்கள்தான்.
நாம் ஒரே குடும்பம் சச்சரவுகள் கூடாது என்று உரையை நிறைவு செய்தார். அதற்கு முன்னதாக காங்கிரஸின் வெற்றிக்கு இந்திரா காந்திதான் காரணம் எனக் கூறிய அவர் தன்னை அரசியலில் கொண்டுவந்தது சஞ்சய் காந்தி என்றும் கூறினார்.
மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்து பேசிய ஆஸாத், ”எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது எப்படி என்று அடல் பிஹாரி வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil