கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இளம்பெண் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் நண்பருக்கு “முஸ்லிம்களை எனக்கு பிடிக்கும்”, என மெசேஜ் அனுப்பியதால், இந்துத்துவ அமைப்புகளால் துன்புறுத்தல் செய்யப்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜகவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது,
சிக்கமகளூருவை சேர்ந்த தன்யஸ்ரீ (வயது 20) என்ற இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை, தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்திருக்கிறார். அப்போது, தன்யஸ்ரீ “எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும்”, என நண்பருக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு, முஸ்லிம்களை நண்பர்களாக்க கூடாது என சந்தோஷ் தன்யஸ்ரீயை எச்சரித்துள்ளார். மேலும், வாட்ஸ் ஆப் மெசேஜின் ஸ்க்ரீன் ஷாட்டை பஜரங் தள், விஷ்வ இந்து பரிஷத் ஆகிய இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அந்த அமைப்பை சேர்ந்த சிலர் தன்யஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது தாயாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதற்கடுத்த நாள் தனது அறையில் தன்யஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்யஸ்ரீ எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், அச்சம்பவம் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், கல்வியை சீரழித்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்கொலை சம்பவம் தொடர்பாக, பாஜகவை சேர்ந்த அனில் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தோஷ் உட்பட நால்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.