இந்த வார தொடக்கத்தில் கிளாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில், இந்தியா அறிவித்த அனைத்து 2030 ஆம் ஆண்டு காலநிலை இலக்குகளும், வளர்ந்த நாடுகளிடமிருந்து போதுமான நிதியைப் பெறுவதற்கும், செயல்படுத்துவதற்கும் உறுதியானவை என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
"பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் வளர்ந்த நாடுகள் தங்கள் நிதிக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதைக் குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்று கோரினார். கிளாஸ்கோவில் தனது உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, 2030 ஆம் ஆண்டிற்கான நமது இலக்குகள், இந்த நிதி கிடைப்பதைச் சார்ந்தது. இது விரைவில் சமர்ப்பிக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட NDC (தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்) இல் பிரதிபலிக்கும், ”என்று சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் ஆர்.பி.குப்தா ஒரு பேட்டியில் கூறினார்.
உலகளாவிய தலைப்புச் செய்திகளை உருவாக்கிய தனது உரையில், 2030 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மூன்று முக்கிய காலநிலை இலக்குகளில் இரண்டினை பிரதமர் மோடி செவ்வாயன்று மேம்படுத்தினார்.
உமிழ்வு தீவிரம் (அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு யூனிட்டுக்கான உமிழ்வு) குறைப்பு இலக்கு 2030 இல் 33 முதல் 35 சதவீதம் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2005 ஆம் ஆண்டின் அளவை விட 45 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அதிகரிப்பதற்கான மற்றொரு இலக்கு ஏற்கனவே இருந்த 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உமிழ்வில் நிகர பூஜ்ஜியமாக்குவோம் என்ற வாக்குறுதி உட்பட மூன்று புதிய இலக்குகளையும் பிரதமர் அறிவித்தார். இந்தியாவின் புதைபடிவமற்ற எரிபொருளின் நிறுவல் திறனை 2030க்குள் 500 GW ஆக அதிகரிப்பது மற்றும் இப்போதிலிருந்து 2030 க்குள் குறைந்தது 1 பில்லியன் டன் உமிழ்வுகளை தவிர்ப்பது ஆகியவை மற்ற இரண்டு இலக்குகள் ஆகும்.
இந்த இலக்குகளை அடைவது சர்வதேச நிதி கிடைப்பதைச் சார்ந்தது தான், அதற்காக இவற்றை நிறைவேற்றுவதில் இந்தியா தீவிரமாக இல்லை என்று அர்த்தமல்ல என்று குப்தா கூறினார்.
"நாங்கள் மிக தீவிரமாக இருக்கிறோம். வேறு சில நாடுகளைப் போலல்லாமல், நாங்கள் செய்யும் ஒவ்வொரு உறுதிமொழியையும் நிறைவேற்றுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால் மற்ற நாடுகள் இலவச பாஸ் பெற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்ய வேண்டிய கடமையில் உள்ளன. மேலும், பிரதமர் சுட்டிக்காட்டியபடி, இதுவரை நிதி குறித்த அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றுத்தனமாகவே உள்ளன,” என்று குப்தா கூறினார்.
பிரதமர் மோடியின் 1 டிரில்லியன் டாலர் காலநிலை நிதிக்கான கோரிக்கையில் இரண்டு பகுதிகள் உள்ளன: ஒன்று இந்தியாவுக்கும் மற்றொன்று பொதுவாக வளரும் நாடுகளுக்கும் என்று குப்தா கூறினார்.
"நாங்கள் இப்போது மற்றும் 2030 க்கு இடையில் $1 டிரில்லியன் காலநிலை நிதியைக் கேட்கிறோம், இது எங்கள் கடமைகளை நிறைவேற்ற வழிவகுக்கும் மாற்றங்களைச் செய்ய எங்களுக்கு உதவுகிறது. ஆனால் வளர்ந்த நாடுகள் 2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் திரட்டுவதாக உறுதியளித்த 100 பில்லியன் டாலர் தொகையை இப்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மற்ற அனைத்து காலநிலை நடவடிக்கைகளின் லட்சியம் எழுப்பப்பட்டு வருவதால், 2015 இல் இருந்த காலநிலை நிதிக்கான அளவுகள் தொடர முடியாது. அதுவும் உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருந்தார். காலநிலை நிதியின் தேவை இப்போது டிரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடும் பல மதிப்பீடுகள் உள்ளன,” என்று குப்தா கூறினார்.
2070 நிகர-பூஜ்ஜிய உறுதியைத் தவிர அனைத்து புதிய இலக்குகளும், அடுத்த வாரம் ஐநா காலநிலை செயலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட NDC இல் வைக்கப்படும்.
நிகர-பூஜ்ஜிய விவாதம் பாரிஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை, மேலும் இந்தியாவின் நீண்ட கால வியூகத்தின் ஒரு பகுதியாக அந்த அர்ப்பணிப்பு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
2015 பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், ஒவ்வொரு நாடும் அதன் காலநிலை செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும், இது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் அல்லது NDCs என்று அழைக்கப்படும், இது காலநிலை மாற்றத்தை சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளின் விவரங்களை அளிக்கிறது. நாடுகள் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் NDCகளை வலுவான மற்றும் அதிக லட்சிய நடவடிக்கைகளுடன் புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற இந்தியா ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இவற்றில் குறைந்தது இரண்டு இலக்குகளான உமிழ்வு தீவிரம் குறைப்பு மற்றும் மின்சாரத் திறனில் புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்கை அதிகரிப்பது ஆகியவை 2030 காலக்கெடுவிற்கு முன்பே நிறைவேற்றப்படும் என்று குப்தா கூறினார்.
“இந்தியாவில் பல துறைகள் தங்கள் செயல்பாடுகளை டிகார்பனைஸ் செய்வதில் மிகவும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, ரயில்வே மட்டும் 2030-ல் இருந்து முழுமையாக மின்சாரமயமாக மாறியவுடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 மில்லியன் டன்கள் உமிழ்வைத் தவிர்க்கும். 2030 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வு தீவிரத்தை 45 சதவிகிதம் குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க ஆதாயங்கள் கிடைக்கும். நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம்," என்று குப்தா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil