Goa CM Manohar Parrikar health : முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் கோவாவின் முதல்வராகவும் பதவி வகித்தவர் மனோகர் பரிக்கர். கணைய நோய் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலையில் இருந்து அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பனாஜியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மோசமடையும் மனோகர் பரிக்கர் உடல்நிலை
அவருடைய உடல் நலத்தில் போதுமான மாற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், கோவாவின் முதல்வராக வேறு ஒருவரை நியமிக்கலாம் என்று பாஜக தரப்பு தெரிவித்து வந்தது. பாஜக அமைச்சர் மற்றும் முக்கிய உறுப்பினருமான தயானந்த் மந்த்ரேக்கர் இது குறித்து அறிவிக்கையில் “மனோகரின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய தலைவர் ஒருவர் நிச்சயம் வேண்டும். முதல்வர் இல்லாமல் எப்படி ஒரு அரசு இயங்கும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவாவின் பாஜக செய்தித் தொடர்பாளர் “இது குறித்து பாஜக தலைமை யோசித்து வருகிறது” என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியினரோ, பாஜகவின் ஆட்சியைக் கலைத்து உத்தரவிடும்படியும், காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரியும் கோவாவின் ஆளுநர் ம்ருதுளா சின்ஹாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மற்றும் மூத்த எம்.எல்.ஏ ஒருவரின் மரணம் என சீட்டுகள் குறைந்து வருகின்றன.
தற்போது 37 சீட்டுகள் உள்ள நிலையில், அதில் பாஜவின் எண்ணிக்கை வெறும் 13 தான். எனவே தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு முதலில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால் கவர்னருக்கு காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.