கோவாவில் உள்ள தனது 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை பதவி விலகச் சதி செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டிய ஒரு வாரத்திற்குப் பிறகு, அதைத் தடுப்பதற்காக மாநில காங்கிரஸ் தனது ஐந்து எம்.எல்.ஏ.க்களை சென்னைக்கு மாற்றியுள்ளது. திங்கட்கிழமை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சங்கல்ப் அமோன்கர், யூரி அலெமாவோ, அல்டோன் டி'கோஸ்டா, ருடால்போ பெர்னாண்டஸ் மற்றும் கார்லோஸ் ஃபெரீரா ஆகிய எம்.எல்.ஏ.க்கள், வெள்ளிக்கிழமை மாலை மாநில சட்டசபையின் அன்றைய நாள் நடவடிக்கைகள் முடிந்தவுடன், தமிழகத்தின் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது.
கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், ஆளும் பாஜகவின் அழுத்தம், தந்திரங்களையும் அச்சுறுத்தல்களையும் தவிர்க்க கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களும் சென்னை சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தினேஷ் குண்டுராவ் ட்விட்டரில் சனிக்கிழமை மாலை பதிவிடுகையில், “நாங்கள் எந்த எம்.எல்.ஏ.க்களையும் அனுப்பவில்லை. கோவா காங்கிரஸில் பிளவை ஏற்படுத்த டாக்டர் பிரமோத் சவந்த் மற்றும் பாஜகவும் செய்து வரும் இடைவிடாத முயற்சிகள், தொடர்ச்சியான அழைப்புகள், அழுத்த யுக்திகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 5 பேர் தாமாகவே முன்வந்து சென்னை சென்றுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை பனாஜிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை 11-ம் தேதி தொடங்கிய கோவா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதியுடன் முடிவடைகிறது.
முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, கேதர் நாயக், அலிக்சோ செக்வேரா மற்றும் ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகியோர் சென்னைக்கு சென்ற குழுவில் இடம் பெறாத மற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.
காங்கிரஸ் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைக்கேல் லோபோவை கோவா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. அவரும் திகம்பர் காமத்தும் பாஜகவுடன் சதி செய்து கட்சியின் சட்டமன்றப் பிரிவில் பிளவை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டினர். இதையடுத்து, காமத் மற்றும் லோபோ ஆகியோருக்கு எதிராக அக்கட்சி தகுதி நீக்க மனுவை கோவா சட்டசபை சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. பாஜக முன்னாள் அமைச்சரான லோபோ, பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.
சனிக்கிழமையன்று மும்பையில் இருந்து கோவா திரும்பிய லோபோ, வேலை விஷயமாக மும்பை சென்றதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கடந்த திங்கட்கிழமை, கூட்டிய கூட்டத்தில் திகம்பர் காமத்தை தவிர அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். முகுல் வாஸ்னிக் கோவா காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையை சரிசெய்வதற்காக காங்கிரஸ் மத்திய தலைமையால் அனுப்பப்பட்டார்.
கோவா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜி.பி.சி.சி) தலைவர் அமித் பட்கர், ஆளும் பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அணி மாறுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது என்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்.
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர்கள் மற்றும் பி.சி.சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பட்கர், கட்சியின் கோவா பிரிவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து, ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுடன் விவாதித்ததாகக் கூறினார்.
“எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது, அவர்களின் சலுகைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன” என்று பட்கர் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார். மேலும், “ஆரோக்கியமான எதிர்ப்பை பாஜக ஏற்க வேண்டும். அவர்கள் ஜனநாயகத்தையும், மக்களின் ஆணையையும் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.
“அவர்கள் பெரும் தொகையை வழங்குவதாகக் கூறுகிறார்கள், அவர்கள் நாங்கள் உங்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வோம் என்று கூறுகிறார்கள். அது இன்னும் தொடர்கிறது” என்று பட்கர் குற்றம் சாட்டினார். “2019ல் நீங்கள் (பாஜக) அதை செய்தீர்கள், இப்போது நீங்கள் அதை நிறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார், “எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள். எனது எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.” என்று பட்கர் கூறினார்.
முன்னாள் ஜி.பி.சி.சி தலைவர் கிரிஷ் சோடங்கர் வெள்ளிக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், “கோவாவில், பாஜக அமைச்சர்களுக்கு அது இல்லை, ஆனால் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோவா போலீஸ் 24 மணி நேரமும் பாதுகாப்புடன் இருப்பது நல்லது. அவர்களது வீடுகளையும் கண்காணித்து வருகின்றனர். பல போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் இந்த பணியில் உள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவா ஃபார்வர்டு கட்சி (ஜி.எஃப்.பி) தலைவர் விகாஸ் பகத் வெள்ளிக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், “முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஓ.எஸ்.டி.கள் எதிர்க்கட்சியின் எம்.எல்.ஏ.க்களைப் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து சலுகைகளை வழங்கி வருகிறார்கள். ஏன் இந்த அவநம்பிக்கை மிஸ்டர் முதல்வர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.எஃப்.பி பொதுச் செயலாளர் துர்காதாஸ் காமத் சனிக்கிழமை மாலை பதிவிட்ட ட்வீட்டில், “கனமழைக்கு மத்தியிலும் மீன்பிடித்தல் (எம்.எல்.ஏ.க்களைப் பிடிப்பது) தொடர்கிறது” என்று கூறினார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விலகி இருக்க பாஜக முயற்சி செய்கிறது. கோவாவில் பாஜக நிலையான ஆட்சியில் இருப்பதாகவும், அதற்கு மேலும் எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை என்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவதே, கட்சி யாருடைய வருகையையும் வேண்டாம் என ஒருபோதும் கதவை மூடிவிட முடியாது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.