Goa Floor Test LIVE Updates : கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, கோவாவின் முதல்வராக பணியாற்றிவந்த மனோகர் பாரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க கோரியது காங்கிரஸ். இருப்பினும் அடுத்த நாள் நள்ளிரவில், கோவாவின் சபாநாயகராக இருந்த 45 வயதுமிக்க பிரமோத் சாவந்த் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது பாஜக.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபையில், பாஜகவிற்கு ஆதரவாக கோவா ஃபார்வர்ட் கட்சியும், மஹார்ஷ்ட்ராவாடி கோமந்தக் கட்சியும் ஆதரவளிக்கும். அக்கட்சிகளில் முறைப்படி விஜய் சர்தேசாய் மற்றும் சுதின் தவலிகர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரமோத் “நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நம்புகின்றேன். என்னுடைய ஆட்சியின் முதல் குறிக்கோள் நல்ல ஆட்சி.
மற்றொன்று மனோகர் பாரிக்கரின் கனவை நிறைவேற்றுவது. 2 வருடங்கள் மனோகர் ஆட்சி செய்துவந்தார். இனி வரப்போகும் மூன்று வருடங்கள் என்னுடைய ஆட்சி தொடரும். கோவாவின் சபாநாயகராக இருந்து பின்பு, கோவாவின் முதல்வரானதை நான் பெருமையாக நினைக்கின்றேன்” என்று கூறினார்.
Goa floor test பெரும்பான்மை மற்றும் ஆதரவு யாருக்கு ?
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபையில் தற்போது 36 நபர்கள் மட்டுமே உள்ளனர். மனோகர் பாரிக்கர் மற்றும் ஃபிரான்சிஸ் டி’சௌசா இருவர் மரணத்தைத் தொடர்ந்து அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளன. அதே போல், இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ 10 நபர்கள் உள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக எம்.ஜி.பி மற்றும் ஃபார்வர்ட் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏக்களும் தங்களின் ஆதரவை பாஜகவிற்கு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்க்கள் மொத்தம் 14 நபர்கள் உள்ளனர். என்.சி.பி எம்.எல்.ஏ ஒருவர் காங்கிரஸிற்கு ஆதரவு அளித்தார்.
இன்று காலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்.எல்.ஏக்கள் பிரமோத் சாவந்திற்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையை நிரூபித்தார் புதிய முதல்வர் பிரமோத் சாவந்த்.
மேலும் படிக்க : இத்தனை எளிமையானவரா மனோகர் பாரிக்கர்.? முதல்வர்கள் எல்லாருக்கும் ரோல் மாடல் இவர் தான்