கோவா நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் மிலிந்த் நாயக் மீது, அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் "பாலியல் குற்றச்சாட்டு" சுமத்திய குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை மாலை அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதன்கிழமை இரவு, முதல்வர் பிரமோத் சாவந்த், “சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்காக மிலிந்த் நாயக் ராஜினாமா செய்துள்ளார், நான் அதை ஏற்றுக்கொண்டேன். காங்கிரஸ் தரப்பில் என்ன ஆதாரம் இருந்தாலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
மிலிந்த் நாயக் தனது பக்க நியாயத்தை முன்னிறுத்தி தனிப்பட்ட அளவில் "போராடுவார்" என்று முதல்வர் கூறினார். "அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தனிப்பட்டவை, அதைப் பற்றி அவர் என்ன செய்வார் என்பது அவரது தனிப்பட்ட முடிவின் விஷயமாகும்" என்று முதல்வர் சாவந்த் கூறினார்.
"அரசு மட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அனைத்தும் 100 சதவீதம் செய்யப்படும்" என்று முதல்வர் சாவந்த் கூறினார். மேலும், மிலிந்த் நாயக் முன்பு வகித்த அமைச்சர் பதவி காலியாகவே இருக்கும் என்று முதல்வர் கூறினார்.
கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் புதன்கிழமை மிலிந்த் நாயக் மீது "பாலியல் குற்றச்சாட்டு" இருப்பதாக அறிவித்தார். பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அமைச்சர் தனது அலுவலகத்தில் தவறாக நடந்துக் கொண்டதாகவும், பாலியல் ரீதியாக சுரண்டியதாகவும் சோடங்கர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக நவம்பர் 30 அன்று, முதல்வர் சாவந்த் தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் "பாலியல் குற்றத்தில்" ஈடுபட்டதாக சோடங்கர் குற்றம் சாட்டியிருந்தார், மேலும் அந்த அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாஜக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருவதாகக் கூறினார். பதினைந்து நாட்களின் முடிவில், அரசாங்கம் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை என்றால், அவர் பெயரைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சோடங்கர் கூறினார்.
மிலிந்த் நாயக்கின் ராஜினாமா, பிப்ரவரி 2022 இல் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக கோவாவில் உள்ள பாஜக அரசாங்கத்திற்கு பெரும் சங்கடமாக இருக்கலாம். ஐம்பத்தெட்டு வயதான மிலிந்த் நாயக் மூன்று முறை எம்.எல்.ஏவாகவும், 2012 இல் மின்சாரம் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக பணியாற்றியவர். அவர் மோர்முகவ் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
டிசம்பர் 10 அன்று, பீகாரில் பெண் ஒருவர், காங்கிரஸ் தலைவர் சங்கல்ப் அமோன்கர் மற்றும் தெற்கு கோவாவைச் சேர்ந்த மற்ற கட்சித் தொண்டர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றச் சதி ஆகியவற்றை செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.
பீகாரில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணின் வீடியோ மற்றும் ஆடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்கியதாகக் கூறப்படுகிறது. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். வெள்ளிக்கிழமை பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை கோவா காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
தெற்கு கோவா போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தானியா, “நேற்று மாலை நாங்கள் புகாரைப் பெற்றோம், மோர்முகாவ் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிரட்டி பணம் பறித்தல், பின்தொடர்தல், கிரிமினல் சதி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளின் கீழான புகார். இந்த வழக்கின் விசாரணை இப்போது தொடங்கும் என்று புதன்கிழமை கூறினார்.
இதற்கிடையில், புதன்கிழமையன்று, அமோன்கர் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் நாயக்கிற்கு எதிராக பனாஜியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், மேலும் அவர்கள் செல்போன் பதிவுகள் மற்றும் அமைச்சர் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதற்கான பிற ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.
நாயக்கிற்கு எதிராக எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும், அந்தப் பெண்ணின் அசல் தொலைபேசி மற்றும் நகல் உட்பட சமர்ப்பித்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் மிரட்டப்பட்டதால், அவர் எங்கள் மீது புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காவல்துறைக்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அமோன்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த பெண் முதலில் 2019 நவம்பரில் தன்னை அணுகி, தான் சுரண்டப்படுவதாகவும் ஆனால் புகார் அளிக்க பயப்படுவதாகவும் கூறியதாக அமோன்கர் கூறினார். அவர் அவளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார், ஆனால் சட்டப்பூர்வமாக, அவள் புகார் செய்ய வேண்டியது அவசியம் என்று அமோன்கர் கூறினார். "அவர் எங்களுக்கு வாட்ஸ்அப் அரட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோவைக் காட்டினார், நான் அதை முதலில் பார்த்தபோது எனக்கு மிகவும் கோபமாக இருந்தது. தான் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், சுரண்டப்பட்டதாகவும், வேலைவாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப்பெண் கூறினார்” என்று அமோன்கர் கூறினார். அவர் தனது தொலைபேசியில் ஒரு அறிக்கையைப் பதிவுசெய்ததாகவும், தனது தொலைபேசியில் உள்ள வாட்ஸ்அப் அரட்டைகள், வீடியோக்கள் மற்றும் ஆடியோவுடன் அவளது அசல் மொபைலை அவரிடம் ஒப்படைத்ததாகவும், அவள் சார்பாக புகார் அளிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அமோன்கர் கூறினார். எவ்வாறாயினும், ஐந்து மாதங்களுக்கு முன்பு அவள் தன்னிடம் திரும்பி வந்ததாகவும், தனக்கும் தன் குழந்தைக்கும் வரும் மிரட்டல்களுக்கு பயந்து தொலைபேசியைத் திருப்பித் தருமாறு கேட்டதாகவும் அமோன்கர் கூறினார். 2015-16 ஆம் ஆண்டு முதல் அந்த பெண்ணுக்கும் அமைச்சருக்கும் இடையே செய்திகள் பரிமாறப்பட்டதாக அவர் கூறினார்.
புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அமோன்கர் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலுக்கு இடையேயான ஆடியோ கிளிப்பை இயக்கி, இது அந்தப் பெண்ணுடன் மிலிந்த் நாயக் பேசும் ஆடியோ என்று கூறினார். அந்த பெண் தனது போனில் சேமித்து வைத்ததாக கூறிய வாட்ஸ்அப் அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்தார்.
மகிளா காங்கிரஸ் தலைவர் பீனா நாயக், மிலிந்த் நாயக் ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “பாதிக்கப்பட்ட பெண் விதவை, அமைச்சர் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார், மேலும் அவரது அனுமதியின்றி அவருடன் உறவு கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி கருவை கலைக்கச் சொன்னது குழந்தையைக் கொன்றது என்பது பெண்ணின் அனுமதியின்றி நடந்ததால் கற்பழிப்பு வழக்கு. இன்னும் இரண்டு நாட்களில் அரசு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்கள் அனைவரும் அவரது வீட்டிற்கு பேரணியாக சென்று அவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை உறுதி செய்வோம். அவரை பதவியில் இருந்து நீக்கி, வீட்டில் உட்கார வைக்க வேண்டும்” என்றார்.
அமோன்கர் 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து மோர்முகாவ் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் நாயக்கிடம் 140 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மிலிந்த் நாயக்கின் ராஜினாமாவுக்குப் பிறகு, கோவா பாஜக தலைவர் சதானந்த் தனவாடே ராஜினாமா செய்யும் முடிவு நாயக்கின் சொந்த முடிவு என்று கூறினார்.
"இந்த வழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை செயல்படுத்துவதற்கு அவர் விருப்பத்துடன் ராஜினாமா செய்துள்ளார். குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். அவை உண்மையா பொய்யா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்,'' என்றார் தனவாடே.
செவ்வாயன்று, கோவா ஆளுநரிடம் சம்பந்தப்பட்ட அமைச்சரின் பெயரை வெளிப்படுத்தியதாக சோடங்கர் கூறியிருந்தார்.
புதன்கிழமை, பனாஜியில் காங்கிரஸ் இல்லத்தில் பேசிய சோடங்கர், “இது குற்றமா இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆனால் ஒரு அமைச்சர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார். இப்படிப்பட்ட அமைச்சர் கோவாவுக்கும், அனைத்து கோவா மக்களுக்கும் அவமானம். அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், பெண்களைச் சுரண்டும் மிலிந்த் நாயக் போன்ற அமைச்சர்கள் தப்பமாட்டார்கள் என்பதை இந்த அரசு கோவா மக்களுக்குக் காட்ட வேண்டும் என்றார்.
அந்த பெண் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், நாயக் மீது புகார் அளிக்க தனக்கு நம்பிக்கை அளிக்குமாறு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தினார் என்றும் சோடங்கர் கூறினார்.
"பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நான் கேட்டுக்கொள்கிறேன்... பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் கோவாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பீகாரின் மகளை சுரண்டியுள்ளார். நீங்கள் உங்கள் மகளுக்கு துணை நிற்பீர்களா? அல்லது அவளை சுரண்டிய அமைச்சருக்கோ துணை நிற்பீர்களா? பீகார் முதல்வரே, அவர் எந்த பயமும் இல்லாமல் முன்வரக்கூடிய வலிமையைக் கொடுங்கள்,'' என்றார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று முதல்வர் சாவந்த் முன்பு கூறியிருந்தார்.
“யாராவது ஆதாரம் இருந்தால் அல்லது யாராவது ஏதேனும் தாக்குதலை எதிர்கொண்டிருந்தால், அவர்கள் புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், 100 சதவீதம் நடவடிக்கை எடுப்பேன். இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. பெண்கள் புகார் அளித்தால், விரிவான விசாரணை நடத்துவோம். உள்துறை அமைச்சராக இருப்பதால், நான் இதில் உறுதியாக இருக்கிறேன், யாரையும் பதவி நீக்கம் செய்வேன், ”என்று சாவந்த் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.