கோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்தாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கோவா சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கோவா அமைச்சர் விஜய் சர்தேசாய், கோவாவுக்கு சுற்றுலா வரும் உள்ளூர் பயணிகளின் ஒரு தரப்பினரை அழுக்கானவர்கள் என ஓரிரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு அமைச்சர், கோவா கலாச்சாரத்தை சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கோவா உணவு மற்றும் கலாச்சார திருவிழாவில் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர், ”கோவாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள், கோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன்”, என கூறினார். மேலும், ”நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். இதனை தெளிவாக கூறுகிறேன்”, எனவும் அவர் தெரிவித்தார்.
”போதை பொருட்கள் விற்பனை செய்யும் சுற்றுலா பயணிகளும், உணவகங்களும் எங்களுக்கு வேண்டாம்”, என, மனோகர் அஜ்கோங்கர் கூறினார்.
ஏற்கனவே, பெண்களும் பீர் குடிக்க துவங்கிவிட்டதால், தான் அதுகுறித்து கவலை கொள்வதாக கோவா முதலமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. அதனால், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்கள் பலரும் தாங்கள் பீர் குடிக்கும் புகைப்படங்களை #girlswhodrinksbeer என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து முதலமைச்சர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.