குஜராத்தின் கோத்ராவின் புறநகர்ப் பகுதியில், தாஹோத் மற்றும் வதோதராவுக்குச் செல்லும் குறுக்கு வழியில், பல அடுக்குகளைக் கொண்ட ஜெய் ஜலாராம் பள்ளி உள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக அகில இந்திய விசாரணையின் மையத்தில் இருந்தாலும், பள்ளி வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியும், ஜெய் ஜலராம் அறக்கட்டளையால் நடத்தப்படும் கேதா மாவட்டத்தில் உள்ள பாடல் பகுதியில் உள்ள பள்ளியும், மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான மையங்களாக நியமிக்கப்பட்டன. சி.பி.ஐ விசாரணையின்படி, பள்ளியின் முதல்வர் புர்ஷோத்தம் மகாவீர்பிரசாத் சர்மா மற்றும் புவியியல் ஆசிரியர் துஷார் ரஜினிகாந்த் பட் ஆகியோர் உள்ளிட்ட பள்ளியின் ஊழியர்கள் தேர்வுக்குப் பிறகு முழுமையடையாத ஓ.எம்.ஆர் (OMR) தாள்களை நிரப்புவதற்கு மாணவர்களுக்கு உதவ முயன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலால் இந்த முயற்சி தடுக்கப்பட்டது.
இதுவரை, ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தீட்சித் படேல் மற்றும் பள்ளியின் முன்னாள் தற்காப்புக் கலை ஆசிரியர் ஆரிப் வோஹ்ரா, முதல்வர் சர்மா மற்றும் புவியியல் ஆசிரியர் துஷார் பட் உட்பட ஆறு பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் தங்கள் குழந்தைகள் தேர்ச்சி பெற உதவுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகியதாகக் கூறப்படும் 26 பெற்றோர்களும் சி.பி.ஐ.,யால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 2015 இல் அப்போதைய குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சுடாஸ்மாவால் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் இரண்டு பள்ளிகள் உள்ளன, ஒன்று ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளி மற்றும் மற்றொன்று குஜராத்தியை பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளி. இவை இரண்டும் மாநில வாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன, மேலும் இருபள்ளிகளிலும் வேறுவேறு முதல்வர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இரண்டு பள்ளிகளும் கிட்டத்தட்ட 1,000 மாணவர்களைக் கொண்டிருக்கின்றன, சிலர் மஹிசாகர், பஞ்சமஹால் மற்றும் தாஹோத் மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 60 கிமீ பயணம் செய்து ஆங்கிலம் மற்றும் குஜராத்தி பயிற்று மொழிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
புர்ஷோத்தம் சர்மா ஆங்கில வழிப் பள்ளியின் முதல்வராகவும், கேட்கி படேல் குஜராத்தி வழிப் பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். கேட்கி படேலின் வாக்குமூலத்தையும் சி.பி.ஐ பதிவு செய்துள்ளது.
‘உண்மை வெல்லும்’
வளாகத்திற்குள் பதற்றம் அப்பட்டமாக உள்ளது. வரவேற்பறையில் இருந்த ஊழியர்கள் வெறுப்பாக பதிலளித்தார்கள் மற்றும் கிர்த்தி ராவ்லிங்கம், ஆங்கில வழிப் பள்ளியின் தலைமையாசிரியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், நமது "விசாரணை" குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கிர்த்தி ராவ்லிங்கம், அதே நேரத்தில் நடந்து வரும் சி.பி.ஐ விசாரணையில் "உண்மை வெல்லும்" என்றும் கூறினார். பள்ளியைப் பற்றிய எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ள மறுத்த கிர்த்தி ராவ்லிங்கம், குஜராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளின் கல்வி அமர்வுகள் விசாரணைகளால் பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.
ஒரு பள்ளி ஆசிரியர் பெயர் வெளியிட விரும்பாத நிலையில், “(நீட் தேர்வு தொடர்பான சர்ச்சை இருந்தாலும்) பள்ளி ஒரு நாள் கூட மூடப்படவில்லை. என்ன நடந்தாலும் (தீட்சித் படேல் கைது) விசாரணைக்குரிய விஷயம்,” என்று கூறினார்.
ஜெய் ஜலராம் ஆங்கில வழிப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் கோத்ரா நகரவாசி ஒருவர், “அவர்களின் சேர்க்கை விளம்பரங்களில், பள்ளியில் உள்ள வழக்கமான கல்வியுடன் ஜே.இ.இ/ நீட் (JEE/NEET) பயிற்சி சிறப்பாக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பள்ளி பெருமையாகக் கூறியது. வணிகவியல் மாணவர்களுக்கு, பட்டயக் கணக்கியல் உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக அவர்கள் கூறினர். பெரும்பாலான பெற்றோருக்கு இது ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்தது, இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மற்ற பயிற்சி வகுப்புகளைத் தேட வேண்டியதில்லை. அதனால்தான், கட்டணம் அதிகமாக இருந்தாலும் பலர் இந்தப் பள்ளியை விரும்பினர்,” என்று கூறினார்.
ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு கோத்ரா குடியிருப்பாளர், ஜெய் ஜலராம் ஆங்கில வழிப் பள்ளியில் தனது இரண்டு குழந்தைகள் படித்து வருவதாக கூறினார், "இது பிராந்தியத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாகும், பிற இடங்களில் விருப்பங்கள் மிகவும் குறைவாக உள்ளன. இதனால்தான் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் 1.5 மணிநேரம் பயணம் செய்து இங்கு படிக்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான அதன் தாக்கம் பற்றி கேட்டபோது, அவர் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை, குறைந்தபட்சம் தற்போது வரை இல்லை என்று கூறினார். “பள்ளி வழக்கம் போல் இயங்குகிறது. விசாரணைக்கும் வழக்கமான கல்வி அமர்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்று அவர் கூறினார்.
இணைப்புகள் மற்றும் செயல்பாடுகள்
கோத்ராவில், ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளையின் தலைவரான தீக்ஷித் படேல், தனது அரசியல் "தொடர்புகளுக்கு" பெயர் பெற்றவர். பார்வதி மற்றும் பாடலில் உள்ள இரண்டு பள்ளிகளின் நிர்வாகத்தை தீக்ஷித் படேல் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்டதாக பார்வதி ஊழியர்கள் தெரிவித்தனர். இரண்டு பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது அறக்கட்டளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பஞ்ச்மஹாலின் வவ்டி குர்த் கிராமத்தில் பழங்குடியின பெண் மாணவர்களுக்காக குஜராத் அரசாங்கத்தின் கியான் சக்தி சிறப்புப் பள்ளியை நிறுவியது.
ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளை கேதா மாவட்டத்தில் உள்ள வனக்போரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, இரண்டு பள்ளிகளில், குறிப்பாக பாடலில் உள்ள மற்ற ஊழியர்களின் தொடர்பு குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. கோவிட்-19க்கு முன், அறக்கட்டளையானது குஜராத்தில் உள்ள ஆனந்த் நகரம், நதியாட் மற்றும் போரியாவி ஆகிய இடங்களில் மூன்று பள்ளிகள் உட்பட மொத்தம் ஐந்து பள்ளிகளை நடத்தி வந்தது. ஆனந்த் நகரம், நாடியாட் மற்றும் போரியாவி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் 2021 இல் மற்ற அறக்கட்டளைகளுக்கு ஒப்படைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தங்கள் பழைய பெயர்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன. 2021 ஆம் ஆண்டில், பார்வதி மற்றும் பாடல் பள்ளிகள் சி.பி.எஸ்.இ இணைப்பினை நிறுத்திவிட்டு மாநில வாரியத்திற்கு மாற்றப்பட்டன.
இதுவரை நடந்த விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள், முதல்வர் புர்ஷோத்தம் ஷர்மா உள்ளிட்டோர், தங்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும்படி, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல் விடப்பட்டது. தேர்வு முடிந்த உடனேயே, முதல்வர் சர்மா மற்றும் புவியியல் ஆசிரியர் பட் ஆகியோர் ஓ.எம்.ஆர் தாள்களில் பதிலளிக்கப்படாத கேள்விகளை நிரப்பி அதை சீல் செய்வதற்கு முன் உறைக்குள் போட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்கள் திட்டப்படி செயல்பட முடியவில்லை.
மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சாத்தியமான முறைகேடுகள் குறித்த ஒரு தகவலைத் தொடர்ந்து, பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் கோத்ரா மையத்தை ஆய்வு செய்ய இரண்டு அதிகாரிகளின் குழுக்களை அனுப்பினார். “படேலுக்கு அறிமுகமான ஒருவர், ஒரு மாணவன் உடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தார். மாணவர் அதே நடைமுறையின் கீழ் நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவிக்காக (குற்றம் சாட்டப்பட்டவரை) அணுகினார். தேர்வு முடிவடைவதற்கு சற்று முன்னதாகவே அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓ.எம்.ஆர் தாள்களை சீல் வைப்பதற்கு முன் மாற்றங்களைச் செய்ய முடியவில்லை.”
மாவட்ட கல்வி அதிகாரி கிரித்குமார் படேல் அளித்த புகாரின் பேரில் குஜராத் காவல்துறை தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்., முறைகேட்டைச் செய்வதற்காக தேர்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ. 7 லட்சம் ரொக்கத்துடன் புவியியல் ஆசிரியர் பட் கார்னர் செய்யப்பட்டதால் முறைகேடு முயற்சி முறியடிக்கப்பட்டது என்று கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.