கோட்சே குறித்த கமலின் சர்ச்சைப்பேச்சு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், போபால் தொகுதி பா.ஜ. வேட்பாளர் பிரக்யா தாகூரின் கோட்சே குறித்த கருத்து பரபரப்பை அதிகரித்துள்ளது.
நாதுராம் கோட்சே "தேசபக்தர்". கோட்சேவை தீவிரவாதி என்று சொன்னவர்களுக்கு மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று போபால் லோக்சபா தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிரக்யா தாகூர் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும் : பா.ஜ., : பிரக்யாவின் கோட்சே குறித்த கருத்திற்கு அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியே கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ. செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் தெரிவித்துள்ளதாவது, கோட்சே குறித்து பிரக்யா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. இது பா.ஜ.,வின் கருத்து அல்ல. இதுதொடர்பாக, பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இக்கருத்து தொடர்பாக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நரசிம்மராவ் கூறினார்.
பிரக்யா தாகூர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல்முறையல்ல.
மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது மும்பை பயங்கரவாத தடுப்பு படை உயரதிகாரி ஹேமந்த் கர்காரே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாடே அவர் உயிர் தியாகத்தை உயர்வாக பேசியபோது, பிரக்யா தாகூர் கூறிய வார்த்தைகள்...
நான் சிறையில் இருந்தபோது, சிறை அதிகாரியாக இருந்த கர்காரே என்னை மோசமாக நடத்தினார். தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தார். இதனால், ஆத்திரத்தில் அவரிடம் நான் நீங்கள் அழிந்து போவீர்கள் என்று கூறினேன். ஒருமாதத்திற்கு பின், அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று என்று பிரக்யா கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிரக்யா தாகூர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி தற்போது ஜாமினில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.