ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தற்போதைய வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகள்:
நிடி ஆயோக் என்ற அமைப்பு பல்வேறு கொள்கை வடிவமைப்புக்கு மத்திய அரசுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறது. 'புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75' என்ற தலைப்பில் பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அந்த அமைப்பு அண்மையில் மத்திய அரசுக்கு அளித்தது.
அதில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில், பொதுப்பிரிவினருக்கான வயது உச்ச வரம்பை, 30லிருந்து 27ஆக குறைக்க வேண்டும், ஆட்சிப் பணிகளில் பிரிவுகள் அடிப்படையில் தரவரிசை வழங்குவதற்கு பதிலாக வெற்றி பெற்றவர்களின் திறமை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யலாம் போன்ற முக்கிய கோரிக்கைகள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளை பரிசீலித்த மத்திய அரசு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்துள்ளது.
'சிவில் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் எதுவும், பரிசீலனையில் இல்லை' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ''சிவில் சர்வீஸ் தேர்வில், வயது உச்ச வரம்பை குறைப்பது தொடர்பான பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஐஏஎஸ் கனவில் உள்ள பொதுப்பிரிவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.