Shubhajit Roy
இலங்கை நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ஷே, நவம்பர் 29ம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 52 சதவீத வாக்குகள் பெற்று, புதிய அதிபராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ஷே அறிவிக்கப்பட்டவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவை சந்தித்து பிரதமர் மோடியின் அழைப்பினை அவரிடம் வழங்கினார். இதனை கோத்தபய ஏற்றுக்கொண்டார்.
கோத்தபய உடனான சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. பிரதமர் மோடியின் அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்பட அவர் விருப்பம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது, இருநாடுகளிடையேயான நட்புறவின் மூலம், மேலும் பல புது அத்தியாயங்களை உருவாக்க இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடன் இதுவரை நட்பு பாராட்டி வந்த இலங்கை, இந்த முறை, இந்தியாவுடன் நல்லுறவு பேண உள்ளதாகவும், மற்ற சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணி காக்க உள்ளதாக, ராஜபக்ஷே குழுவினர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில் நன்றி தெரிவித்து கோத்தபய ராஜபக்ஷே தெரிவித்துள்ளதாவது, இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் வரலாறு மற்றும் பல முக்கிய பொதுவான கட்டமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை பலப்படுத்தி, எதிர்காலத்தில் பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாக, கோத்தபய ராஜபக்ஷே குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.