Government invites leaders of 5 parties for talks : நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்டு வரும் தொடர் அமளிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இடைநீக்கம் செய்யப்பட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு. ஆனால் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மத்தியில் நிலவி வரும் ஒற்றுமையை குலைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் ப்ரல்ஹாத் ஜோஷிக்கு பதில் அளித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “12 மாநிலங்களவை உறுப்பினர்கள் நீக்கத்திற்கு எதிராக அனைத்துக் கட்சியினரும் ஒன்றாகவே போராட்டம் செய்தோம். நவம்பர் 29ம் தேதி மாலையில் இருந்து மாநிலங்களவை தலைவர் ( Chairman of the Rajya Sabha) அல்லது அவைத் தலைவர் (Leader of the House) பியூஷ் கோயல் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களின் நியாயமான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அனைத்து எதிர்க்கட்சியினரையும் அழைப்பதற்கு பதிலாக சில கட்சிகளின் தலைவர்களை மட்டுமே அழைத்துள்ளது நியாயமற்றது. மேலும் இது துரதிர்ஷ்டவசமானது” என்றும் கூறினார்.
காங்கிரஸின் பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ரிபுன் போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன் மற்றும் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோரும், திரிணாமுல் காங்கிரஸின் டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, சிவசேனாவின் ப்ரியங்கா சதுர்வேதி மற்றும் அனில் தேசாய், சி.பி.ஐ.(எம்) கட்சியின் இளமரம் கரீம், சி.பி.ஐயின் பினோய் விஸ்வம் ஆகியோர் குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில் இடை நீக்கம் செய்யப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் அரசின் இந்த அழைப்பை ஒரு “ஸ்டண்ட்” என்று விமர்சனம் செய்தது.
பேசுவதற்கு உரிமை வேண்டும்; கேட்பதற்கு கடமை உண்டு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரேக் ஓ` ப்ரையன் இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் “இந்த அழைப்பில் 10 எதிர்க்கட்சித் தலைவர்களை அரசு புறக்கணித்துள்ளது. ஆனால் அரசின் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. எதிர்க்கட்சியினர் மிகவும் தெளிவாக உள்ளனர். முதலில் இடைநீக்கத்தை ரத்து செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டத்திற்கு சில கட்சிகளைத் தேர்ந்தெடுத்து அழைப்பதன் மூலம் அரசாங்கம் பிரித்து ஆளும் கொள்கையை பயன்படுத்த முயற்சி செய்துள்ளது என்று மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
சி.பி.ஐ கட்சியின் பினோய் விஸ்வம், 12 எம்.பிக்கள் இடைநீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் ஒற்றுமையுடன் போராடி வருகிறோம். குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ள சூழலில் ஐந்து கட்சியினரை மட்டும் ஆலோசனைக்காக அழைப்பது எதிர்க்கட்சியினரை பிளவுப்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார். மேலும் இதில் சி.பி.ஐ. பங்கேற்காது என்றும் இன்று நடைபெறும் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் பினோய்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil