நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (டிசம்பர் 19) மக்களவையில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள், மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து வருவதை சுட்டிக் காட்டி மத்திய பா.ஜ.க அரசு அந்த மாநிலங்களின் வளர்ச்சியில் வாய் வார்த்தைகளில் மட்டும் ஈடுபடுவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர். நரேந்திர மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிராந்தியத்தில் அமைதியும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருப்பதாக மத்திய அரசு கூறியது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியே பிரதமர் மோடியின் முதன்மையான நோக்கம். அரசாங்கம் அதன் அனைத்து திட்டங்களையும் அங்கு திறம்பட செயல்படுத்தி வருகிறது என்று கூறினர். மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வடகிழக்கில் அமைதியும் அரசியல் ஸ்திரத்தன்மையும் நிலவுகிறது. இன்று மக்கள் அங்கு முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என்று ரெட்டி கூறினார்.
டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு
மத்திய அரசு வாய் வார்த்தைகளில் மட்டும் சொல்லவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். வளர்ச்சிப் பணிகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் மக்களை அப்பகுதிகளை விட்டு வெளியேறச் செய்கிறது என்பதை கூறி தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு பேசினார்.
அவர் பேசுகையில், “1.48 கோடிக்கும் அதிகமான மக்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வெளியேறி வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட உணவுக்காக இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு திறமையான மனிதவளம் இல்லை, உயர்கல்விக்கு அதிக வாய்ப்புகள் இல்லை” என்று பாலு குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரெட்டி, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடம்பெயர்ந்தவர்களின் விவரம் குறித்து தெரியவரும். பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு” என்றார்.
வடகிழக்கு மாநிலங்களின் “வளர்ச்சி நடவடிக்கைகளை” குறித்து கணக்கிட வேண்டும் என்று பாலு வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் வின்சென்ட் H பாலா, பிரத்யுத் போர்டோலோய் ஆகியோரும் மத்திய அரசை இதையே வலியுறுத்தினர். அரசாங்கம் வாய் வார்த்தைகளில் மட்டும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சீதாராமன், “கடந்த பட்ஜெட்டுக்கு முன், வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். வின்சென்ட் பாலா வாழ்வாதாரம் பற்றி கேள்வி எழுப்பினார், இது மிகவும் உண்மையான கேள்வி, இதற்காக 2022-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சிறப்பு திட்டம், PM-DevINE தொடங்கப்பட்டது. வடக்கு-கிழக்கு சபையில் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வாழ்வாதார மேம்பாட்டிற்காக வடகிழக்கு மாநில மக்களின் தேவைக்கேற்ப இது சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
“2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வடகிழக்கு பிராந்திய (NER) மாநிலங்களில் 1,52,05,214 புலம்பெயர்ந்தோர் உள்ளனர். இவர்களில் 93.8 சதவீதம் பேர் (1,42,62,490) மாநிலங்களுக்குள்ளே குடியேறியவர்கள் மற்றும் 6.2 சதவீதம் (9,44,050) பேர் மட்டுமே வேறு மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள்.
மொய்த்ரா விமர்சனம்
வேறு மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான அகில இந்திய எண்ணிக்கை 11.9 சதவீதமாகவும், மாநிலங்களுக்குள் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 88.1 சதவீதமாகவும் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வெளியேறி மற்ற மாநிலங்களுக்கு மேற்கு வங்கம் (39.56 சதவீதம்), டெல்லி (7.66 சதவீதம்) மற்றும் மகாராஷ்டிரா (7.4 சதவீதம்) சென்றுள்ளனர்” என்று ரெட்டி கூறினார்.
அமைச்சரின் பதிலில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை. திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா, ரெட்டியை விமர்சனம் செய்தார். அவர் பா.ஜ.க தலைவராக நடந்து கொள்ளாமல், இந்திய அரசாங்கத்தின் அமைச்சராக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/