உக்ரைனில் சிக்கியுள்ள 12,000க்கும் அதிகமான இந்தியர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட இந்திய விமானப் படையை களமிறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்திய குடிமக்களை மீட்கும் பணிகளுக்கு ஆபரேஷன் கங்கா என்று மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது.
ரஷ்யா தொடர்ந்து 6-ஆவது நாளாக தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் குறிப்பாக உக்ரைனின் கார்கிவ் நகரில் கடும் சண்டை நடந்து வருவதால் மீட்புப் பணிகள் கடுமையான சவால் அளித்து வருகிறது.
ரஷ்யா தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கிய பிறகு வான்வெளியை உக்ரைன் மூடியது.
இதனால், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளின் எல்லைகளில் இந்திய விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 182 இந்தியர்களுடன், ருமேனியாவில் இருந்து புறப்பட்ட 7ஆவது சிறப்பு விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது.
அதேபோல், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன்’ ஆபரேஷன் கங்காவின் 8ஆவது விமானம், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது.
மேலும், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம், ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஏற்கனவே 6 விமானங்களில் 1,400 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர் ஒருவர் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், இந்திய விமானப் படையை மீட்புப் பணிகளுக்காக களத்தில் இறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கமர்ஷியல் விமானங்களும் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும்.
மீட்புப் பணிகளுக்காக விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை களத்தில் இறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலை இந்திய அரசும், விமானப் படையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தபோது இந்தியர்களை மீட்க விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
விமானப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், எந்த உத்தரவு வந்தாலும் அதை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம் என்றார்.
தலைநகர் கீவ்வை விட்டு உடனடியாக இந்தியர்கள் வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் அதிகம் பேர் உக்ரைனின் தலைநகர் கிவ் மற்றும் கடும் சண்டை நடந்து வரும் கார்கிவ் ஆகிய நகரங்களில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் செல்போன்களில் வீடியோக்களை எடுத்து அனுப்பி தங்களை காப்பாற்றுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil