கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள லோக் ஆயுக்தா ஏற்பாடு செய்திருந்த லோக் ஆயுக்தா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (நவம்பர் 15) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அரசின் மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு காரணம் இருக்கும். ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. லோக் ஆயுக்தா போன்ற அமைப்பு தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்வது ஆளுநர் உள்பட அரசியலமைப்பு அலுவலகங்களின் கடமை” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜீவ் கலந்து கொண்டார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, கோவை கார் வெடிப்பு சம்பவம் உள்பட பல்வேறு விவகாரங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்தநிலையில் அண்மையில் ஆளும் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர். என். ரவி-யை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்தனர்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்படவில்லை. 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் எனக் கூறி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர்.
இதேபோல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆளுநர் அரசின் செயல்பாடுகளில் தலையீடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சங்பரிவார் கொள்கைகளை செயல்படுத்த முயற்சிப்பதாகவும், மாநிலத்தின் உயர்கல்வித் துறையில் தலையீட முயல்வதாகவும் குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியில் தி.மு.க மூத்த தலைவரும் எம்.பியுமான திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டத்தில் இரு மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil