tamilisai-soundararajan | puducherry | புதுச்சேரி, கடற்கரை சாலையில் உள்ள கண்காட்சி அரங்கத்தில் ரெசோனன்ஸ் ஓவியக் கண்காட்சி இன்று (நவ.14) நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காவல்துறை தலைமை அதிகாரி ஸ்ரீநிவாஸ், மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “கனமழை காரணமாக புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிவாரண முகாம்கள் ஏற்படாத அளவிற்கு சூழல் கட்டுக்குள்தான் இருக்கிறது. காரைக்காலில் மழை அதிகமாக இருக்கிறது. அதற்கான உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை பார்வையிட அதிகாரிகளின் பணி தொடங்கியுள்ளது.
தண்ணீர் எங்கேயாவது தேங்கி நிற்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சல் முன்புபோல இல்லாமல் கட்டுக்குள் இருக்கிறது. அதனால் எத்தகைய தகவலையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமீபத்திய தொழிற்சாலை விபத்து வருத்தமான நிகழ்வு. அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
தலைமைச் செயலரிடம் எல்லாருக்கும் வேண்டிய உதவிகள் கிடைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதோடு தொடர்ந்து இந்த நிறுவனம் செயல்படுவதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் உறுதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“