பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் டியோடரண்ட் விளம்பரத்தை, ட்விட்டர் மற்றும் யூடியூப்-லிருந்து நீக்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விளம்பரத் துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்பும், லேயர் ஷாட் விளம்பரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி, அதனை ஒளிப்பரப்பு செய்வதை நிறுத்திட நிறுவனத்திடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விளம்பரம், தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை விதிகளை மீறுவதாக, ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதனை, பலரும் தங்களது ட்விட்டர் கணக்குகளில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய விளம்பரம் சமூக வலைதளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. வெளிப்படையாக பாலியல் வன்கொடுமையை ஊக்கிவிப்பதாக பலரும் குற்றச்சாட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில், டியோடரண்ட் பாடி ஸ்ப்ரேவின் Layer’r Shot விளம்பரம், மில்லியன் கணக்கில் பார்வையிடப்பட்டுள்ளது. பிற சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட வீடியோ, பெண்கள் தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை விதி 2021ஐ மீறுவதாகவும் உள்ளது. அந்த விதியின்படி, பாலினத்தின் அடிப்படையில் இழிவுபடுத்தும் எந்தவொரு தகவலையும் பயனர்கள் காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, வெளியிடவோ அனுப்பவோ, சேமிக்கவோ, பகிரவோ தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், இந்த விளம்பரம் ASCI விதிமுறைகளை தீவிரமாக மீறுவதாக இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் சிலர் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் (ASCI)ஐ விளம்பர பதிவில் டேக் செய்தனர். அதற்கு பதிலளித்த ASCI, இந்த விளம்பரம் ASCI வரையறைகளை தீவிரமாக மீறுகிறது. பொது நலனுக்கு எதிரானது. உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், விளம்பரத்தை ஒளிபரப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டு, விளம்பரதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil