தொடர்ந்து, 17 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் சந்தை வாய்ப்புகளை எற்படுத்தித் தரும் என்றும், விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய தொழில் துறை கூட்டு சம்மேளனத்தின் 93வது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, " இந்தப் புதிய சட்டத்தின் மூலம், விவசாயிகள் இடைத்தரகர்களை தவிர்த்து தங்களது பொருட்களை நேரடியாக விற்கலாம். மேலும், விவசாயிகள், தங்கள் வேளாண் பொருட்களை உள்ளூர் சந்தைகளைத்தவிர இதர இடங்களிலும் விற்கலாம்" என்று குறிபிட்டார்.
" கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளை விரிவாக்கம் செய்யும்.தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் விவசாயத்தில் முதலீடுகளை கொண்டு வர உதவும், ”என்றார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26 முதல் டெல்லியின் எல்லையில் முகாமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தைகளை புதுடெல்லியில் நடத்தியது. சில, கணிசமான மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முன்வந்தாலும், மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியுடன் உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இடையேயான சந்திப்புக்குப் பிறகு, டிசம்பர் 9 ஆம் தேதி திட்டமிடப்பட்ட கடைசி சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்திய விவசாயிகள், ஹரியானாவில் இன்று சில சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அதிகாரிகளை அனுமதிக்கவில்லை.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு மீண்டும் பேச்சு நடத்தி தீர்வு காண முன்வரவேண்டும் என்று மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போதுமே தயாராக உள்ளது என்றும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். வேளாண் துறையின் வளர்ச்சிக்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இச்சட்டங்கள் குறித்த விவசாயிகளின் எந்த ஒரு கோரிக்கையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும், விவசாயிகளின் நிலங்கள் எந்தவொரு நிறுவனத்தாலும் ஆக்கிரமிக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.