யூனியன் பிரதேசமான லடாக் பகுதி முழுவதும் போராட்டங்களின் பின்னணியில் இருப்பதால், அப்பகுதிக்கு சட்டப்பிரிவு 371 போன்ற பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு (மார்ச் 4) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் லே அபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் பிரதிநிதிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, நிலம், வேலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்த அவர்களின் அனைத்து பிரச்சனைகளும், அரசியலமைப்பின் பிரிவு 371 என்ற சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தீர்க்கப்படும் என்று அமைச்சர் அவர்களிடம் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க : Centre considers ‘Article 371-like’ shield for Ladakh
இதனிடையே லடாக் பகுதியை அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற பிராந்தியத்தின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக லடாக் சட்டப்பேரவைக்கான கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் போல் இல்லாமல், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிராந்தியத்தின் பிரதிநிதிகள் உள்துறை செயலாளர் அஜய் பல்லா உட்பட உள்துறை அமைச்சகத்தின் (MHA) உயர் அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில், லடாக் பகுதியில் உள்ள "நிலம், வேலைகள் மற்றும் கலாச்சாரம் பற்றிய மக்களின் கவலைகளுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள அமைச்சர் அமித்ஷா, 371வது சட்டப்பிரிவின் கீழ் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் இந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்யலாம் என்றும், பிராந்தியத்தில் உள்ள 80% வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும், ஆலோசனையில் பங்கேற்ற லடாக் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில், லடாக் மாநிலம், சட்டமன்றம் மற்றும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கையுடன் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் லடாக் பகுதியில் தொழில்மயமாக்கல் காரணமாக சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். “இப்போது மக்களுக்கு பிராந்திய நிர்வாகத்தில் எந்த கருத்தும் இல்லை. எல்லாம் அதிகாரத்துவமாகிவிட்டது. இப்பகுதியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று சட்டமன்றம் மூலம் மக்கள் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டும். இருப்பினும், அது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த உறுதிமொழியும் இல்லை” என்று மற்றொரு தலைவர் கூறியுள்ளார்.
சட்டமன்றத்திற்கான கோரிக்கையை நிராகரித்த அமித் ஷா, மலை சபைகள் மூலம் உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்று, லே மற்றும் கார்கில் பகுதிகளில் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்ததாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மலையக சபைகளுக்கும் போதுமான அதிகாரங்கள் வழங்கப்படலாம் என்றும், அவற்றின் வரவு செலவுத் திட்டம் ஒரு மாநிலத்தைப் போலவே சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக தூதுக்குழுவின் தலைவர்களில் ஒருவர் கூறினார்.
அரசாங்கம் நியமித்த உயர் அதிகாரக் குழு ஏற்கனவே இப்பகுதியிலிருந்து இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. லடாக்கிற்கான கலாச்சாரம், மொழி, நிலம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் விரும்புவதாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன. லடாக் தலைவர்கள் மத்தியில் உள்ள வட்டாரங்கள் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.