scorecardresearch

அக்னிபாத் திட்டம்:  வன்முறை எதிரொலி.. இந்த ஆண்டுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தி அரசு அறிவிப்பு!

“குறிப்பாக கிராமப்புறங்களில், வேலையற்ற இளைஞர்களின் குறைகளை புறக்கணிப்பதாக”, மற்றும் ஆயுதப்படைகளை “மதிப்பதில்லை” என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தாக்கின.

அக்னிபாத் திட்டம்:  வன்முறை எதிரொலி.. இந்த ஆண்டுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தி அரசு அறிவிப்பு!
Tamil News today live

வட மாநிலங்களில் இளைஞர்களின் கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து, ’அக்னிபாத்’ திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

ஆயுதப் படைகளுக்கான புதிய குறுகிய கால ஆட்சேர்ப்புக் கொள்கையான அக்னிபாத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய பல கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி, வியாழன் அன்று பல மாநிலங்களில், வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.

செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட அசல்’அக்னிபாத்’  திட்டத்தின் கீழ், 17 ½ வயது முதல் 21 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்கள். ஆனால் வியாழக்கிழமை, பாதுகாப்பு அமைச்சகம், “2022 ஆம் ஆண்டிற்கான அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள முடியாததால், 2022 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்புக்கு’ ஒரு முறை விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அமைச்சகம் கூறியது.

முன்னதாக, ஜேடியூ மற்றும் பாஜக ஆளும்  பீகாரில் போராட்டங்கள் மிகவும் வன்முறையாக இருந்தது. கைமூரில், வேலை தேடும் இளைஞர்கள் நின்று கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைத்தனர். கோபால்கஞ்சில் உள்ள சித்வாலியா ரயில் நிலையம் மற்றும் சாப்ராவிலும்’ ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.

சேதத்தை உறுதிப்படுத்திய பீகார் ஏடிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) சஞ்சய் சிங், “வன்முறை போராட்டங்களுக்காக இதுவரை 125 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்” என்றார்.

போராட்டம் காரணமாக 34 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகவும், 8 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டதாகவும், 72 ரயில்கள் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு மற்றும் டெல்லியில் உள்ள ஒரு ரயில் நிலையத்திலும் கடுமையான போராட்டங்கள் நடந்தன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் ஆகிய இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசியல் அரங்கிலும் இந்த போராட்டம் எதிரொலித்தது.

அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜேடியு தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தினார். இதுகுறித்து இந்தியில் ட்வீட் செய்த அவர்: “அக்னிபாத் திட்டத்தின் அறிவிப்புக்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக அதிருப்தி, ஏமாற்றம் மற்றும் இருண்ட எதிர்காலம் குறித்த அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது” என்று கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜேடியு தேசிய செய்தி தொடர்பாளர் கே சி தியாகி கூறியதாவது: “இப்போது மாணவர்கள் போராட்டம் நடத்துவதால், மத்திய அரசு ஒரு வழியைக் கண்டுபிடித்து, அக்னிபாத் திட்டத்தை இளைஞர்களுக்கு விளக்கத் தவறிவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்த போராட்ட முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றார்.

மூத்த ஜேடி(யு) தலைவரும் பீகார் அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ், “மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச வேண்டும்” என்று மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

“குறிப்பாக கிராமப்புறங்களில், வேலையற்ற இளைஞர்களின் குறைகளை புறக்கணிப்பதாக”, மற்றும் ஆயுதப்படைகளை “மதிப்பதில்லை” என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தாக்கின.

பீகாரில், அரா, கைமூர், சிவன், முங்கர், சஹர்சா மற்றும் பாகல்பூர் உள்ளிட்ட குறைந்தது 10 மாவட்டங்களில் அமைதியின்மை பதிவாகியுள்ளது.

நவாடா மற்றும் மதுபானியில் உள்ள பாஜக அலுவலகங்களை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், வாரிசாலிகஞ்சில் பாஜக எம்எல்ஏ அருணா தேவியின் வாகனத்தை குறிவைத்ததாகவும், சாப்ராவில் உள்ள பாஜக எம்எல்ஏ சி என் குப்தாவின் வீட்டின் மீது கற்களை வீசியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரியானாவின் பல்வாலில், ஆக்ரா சௌக் அருகே உள்ள துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களால் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் காயமடைந்தனர் மற்றும் ஐந்து அதிகாரிகளின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்.

இதைத் தொடர்ந்து ஹரியானா அரசாங்கம் அப்பகுதியில் தடை உத்தரவுகளை விதித்தது மற்றும் “வதந்திகள் பரவுவதைத் தடுக்க” பல்வாலில் இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. அவர்கள் டிசி அலுவலகத்திற்கு சேதம் விளைவிக்க முயன்றனர் மற்றும் காவல்துறையினரிடமிருந்து வெடிமருந்துகளைத் திருடினர், ”என்று போலீசார் தெரிவித்தனர். மாநிலத்தின் பிற இடங்களிலும் போராட்டங்கள் பதிவாகியுள்ளன.

ரோஹ்தக்கில், ஜிண்டில் உள்ள லிஜ்வானா கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், ஆயுதப் படையில் ஆட்சேர்ப்புக்கு தயாராகி வருவதாகவும், புதிய கொள்கையால் ஏமாற்றமடைந்ததாகவும் கூறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய அரசு செவ்வாயன்று அக்னிபாத் திட்டத்தை வெளியிட்டது, இதன் கீழ் பெரும்பாலான வீரர்கள் நான்கு ஆண்டுகளில் சேவையை விட்டு வெளியேறுவார்கள் – ஆண்டுக்கு 45,000 முதல் 50,000 ஆர்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் ஆனால் நிரந்தர கமிஷனின் கீழ் 25 சதவீதம் பேர் மட்டுமே 15 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்படுவார்கள்.

புதன்கிழமையன்று, மத்திய ஆயுதப் படைகள், அசாம் ரைபிள்ஸ் மற்றும் சில மாநில போலீஸ் சேவைகளுக்கான ஆட்சேர்ப்பில் முன்னுரிமை உட்பட, முன்கூட்டியே விடுவிக்கப்படுபவர்களுக்கு அரசாங்கம் தொடர்ச்சியான நலன்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரே உயிர்நாடி ஆயுதப் படையில் வேலையில் சேருவதுதான். நிச்சயமற்ற எதிர்காலத்துடன் நான்கு வருட வேலைக்கு யார் செல்வார்கள்? தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியில், ஆயுதப் படையில் வாய்ப்புக்காகத் தயாராகி வரும் வேலையற்ற இளைஞர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது,” என்று போராட்டத்தில் பங்கேற்ற பீகாரில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த மாணவர் அமன் சா கூறினார்.

“ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு இளைஞரையாவது ஆயுதப்படைக்கு அனுப்பாத கிராமம் பீகாரில் இல்லை. மாநிலத்தில் இருந்து 2.5-3 லட்சம் மாணவர்கள் ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். குறுகிய கால அக்னிபாத் திட்டம் அவர்களுக்கு ஒரு சாபமாக வந்துள்ளது,” என்று பீகாரில் வேலை தேடுபவர்களுக்கு பிரபலமான பயிற்சித் திட்டங்களை நடத்தும் எஸ் கே ஜா கூறினார்.

ஜம்முவில், அக்னிபாத் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், BC சாலையில் உள்ள இராணுவத்தின் ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு வெளியே ஒரு பெரிய கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

“நாங்கள் 2019 இல் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்தோம், உடல் மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எழுத்துத் தேர்வு ஒன்றுக்கு மேற்பட்ட முறை ரத்து செய்யப்பட்டது. இது இறுதியாக வியாழக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டது, ”என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.

உ.பி.யின் சில மாவட்டங்களில், முக்கியமாக புலந்த்ஷாஹர் மற்றும் ஆக்ராவிலும் போராட்டங்கள் காணப்பட்டன. ஆனால், போராட்டங்கள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Govt raises upper age to 23 for agnipath scheme in this year after protests