/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1010.jpg)
Govt warns TV channels over 'indecent' portrayal of kids in reality shows - 'குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள் இனி இருக்கவே கூடாது' - ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
குழந்தைகளை ஆபாச நடன அசைவுக்கு பயன்படுத்தாதீர்கள். நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போது மிகுந்த கட்டுப்பாடுடன், கண்ணியமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் தொலைக் காட்சிகளுக்கும் ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், "திரைப்படங்கள் மற்றும் பிறவகையான பொழுதுபோக்கு ஊடகங்களில், பிரபலமான நடனக் கலைஞர்கள் வெளிப்படுத்தும் உடல் அசைவுகளை, நடனம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளும் வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.
இதுபோன்ற அசைவுகளை வெளிப்படுத்துவது அவர்களது வயதுக்கு பொருத்தமற்றது என்பதோடு, இதுகுறித்து அவ்வப்போது உரிய ஆலோசனை வழங்கப்படுகிறது.
அத்துடன் இத்தகைய நிகழ்ச்சிகள், குழந்தைகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, மிக இளைய மற்றும் ஈர்ப்புத்தன்மையுடைய வயதில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது.
1995-ம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தொலைக்காட்சிகளும் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த விதிமுறைகளின்படி, குழந்தைகளின் தரத்தை தாழ்த்தக்கூடிய எந்தவொரு நிகழ்ச்சியும் தொலைக்கட்சியில் இடம் பெறக் கூடாது. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் எந்தவித கெட்ட வார்த்தைகளோ அல்லது வன்முறையை தூண்டும் காட்சிகளோ இடம் பெறக்கூடாது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இயன்ற அளவுக்கு கட்டுப்பாடு, கண்ணியத்துடன், மிகுந்த எச்சரிக்கையுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.