இ-விசா மூலமாக இந்தியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டினருக்கான நற்செய்தியாகவே இது இருக்கின்றது. இந்தியாவிற்கு சுற்றுலா, தொழில், மற்றும் மருத்துவம் தொடர்பாக வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 14 விசா கவுண்ட்டர்களை வைக்க முடிவு செய்திருக்கின்றார்கள். இக்கவுண்ட்டர்கள் வைப்பதன் மூலம், அவர்கள் காத்திருக்கும் நேரம், இமிகிரேஷன் விசாரணை நேரம் அனைத்தும் பாதியாக குறைந்துவிடும்.
ஒரு நாளைக்கு சுமார் 2500 வெளிநாட்டினராவது இந்திரா காந்தி விமான நிலையம் வருகின்றார்கள். அதில் 45% பேர் இ-விசாக்கள் மூலம் பயணிப்பவர்கள் தான். ஏற்கனவே 32 கவுண்ட்டர்கள் இருக்கும் நிலையில், இ-விசா வைத்திருப்பவர்களுக்கென புதிதாக 14 கவுண்ட்டர்கள் வைக்கப்படும். அந்த கவுண்ட்டர்கள் வருகின்ற செப்டம்பரில் இருந்து செயல்படும் என்றும் தகவல் கூறியிருக்கின்றார்கள்.
அதிக பரபரப்புடன் விமான நிலையம் இயங்கும் நேரத்தில் தோராயமாக ஒரு பயணியின் விபரங்களை பரிசோதிப்பதற்கு முப்பது நிமிடங்கள் ஆகின்றது. அதிக பயணிகள் இருக்கும் போது, அவர்கள் அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த புதிய ஏற்பாட்டின் மூலம் இந்நேரம் பதினைந்து நிமிடங்களாக குறைந்துவிடும். இ-விசா வைத்திருப்பவர்களை பரிசோதிக்க வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்பதால் இனி நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.